கவலையளிக்கும் அனைத்துலகப் போக்குக்கு மத்தியில் சிங்கப்பூர் போதைக்கெதிராகச் சகிப்புத்தன்மையற்ற நிலையை உறுதியுடன் கடைப்பிடித்து வருவதாகக் கூறியுள்ளார் உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம்.
போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மே 16ஆம் தேதி சன்டெக் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல நாடுகள் அனுமதிக்கப்பட்ட போதை மருந்துக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகவும், அனைத்துலக மட்டத்தில் போதைப் பொருள்களைச் சட்டப்பூர்வமாக்க உந்துதல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவை பெரும்பாலும் அரசு சாரா நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்குப் பெரும் பணம் பின்புலத்தில் ஆதரவாக இருப்பதாகவும் சொன்னார்.
‘அடிக்ஷன்’ எனும் பிரபல இதழாசிரியருக்கு, அயர்லாந்து போதைப்பொருள் சேவைப் பிரிவின் சுகாதார சேவை நிர்வாகி (Addiction Service of the Health Service Executive) எழுதிய கடிததைச் சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர், அதில் குறிப்பிட்டுள்ள அனைத்துலகப் போதைப்பொருள் கொள்கைகளில் ‘ஓப்பன் சொசைட்டி பவுன்டேஷன்’ எனும் அமைப்பின் தாக்கம் குறித்தும் பேசினார்.
போதைப்பொருள் கொள்கைகள் குறித்த ஆய்வு உள்பட பல்வேறு வகைகளில் அவ்வமைப்பு மேற்கொண்ட செலவுகளைக் குறிப்பிட்ட அவர், “இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின் இவை பெரும் கவலையளிப்பவையாகும்,” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து சிங்கப்பூர்ச் சமூகத்தில் ஆங்கிலேய, ஜப்பானிய ஆட்சிக்காலம் தொட்டு நிலவிய போதைப்பொருள் புழக்கத்தின் வரலாறு குறித்தும் தற்போதுள்ள நிலை குறித்தும் பேசினார் அமைச்சர் கா சண்முகம்.
சிங்கப்பூரில் போதைப்புழக்கத்தின் நிலையில் இப்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் போதைப்பொருள் மனிதரிடையே ஏற்படுத்தும் தாக்கம் பெரியது என்று கவலை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
போதையால் உயிரிழந்தோர் குறித்தும், அதனைத் தடுக்க ஆகும் செலவுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், தரவுகள் குறித்தும் பேசினார்.
“போதையால் உயிரிழந்தோரை நினைவுக்கூறும் வேளையில், அதிலிருந்து மீண்டோரின் கதைகளைச் குறிப்பிட்டு வாழ்த்துவதும் முக்கியம்,” என்றார். அவ்வாறு மீண்டு சமூகத்தில் நேர்மறைத் தாக்கம் ஏற்படுத்தும் இருவரது கதைகளைச் சொல்லி வாழ்த்தினார்.
அரங்கிலிருந்த அனைத்துலகப் பங்கேற்பாளர்களை நோக்கி, “இந்த நினைவு தினம் உங்கள் நாடுகளில் நடைபெற்ற போதைப்பொருள் தொடர்பான தீங்குகள் பற்றிய பிரதிபலிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து இதனை எதிர்த்துப் போராட இணைந்து செயல்படுவோம் என நம்புகிறேன்,” என்றார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் போதை பாதிப்புகள்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐந்து குறும்படங்களும் வெளியிடப்பட்டன. சன்டெக் மையத்தின் மத்தியில் ஒரு சிறு விழிப்புணர்வுக் கண்காட்சியும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சியில் போதையால் மரித்தோருக்காக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.