தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருளற்ற வட்டாரம்: ஆசியான் கூட்டறிக்கையை முன்மொழிந்தது சிங்கப்பூர்

2 mins read
d0cceded-adfa-4a0e-a7a1-c7c050ffb4b4
உள்துறை அமைச்சர் கா சண்முகம் ‌ஷங்ரிலா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற 46வது ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஆசியானைப் போதைப்பொருளற்ற வட்டாரமாக உருவாக்கும் நோக்கத்தை மறுவுறுதிப்படுத்த கூட்டறிக்கை ஒன்றை சிங்கப்பூர் முன்மொழிந்துள்ளது.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தச் சிங்கப்பூர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போதைப்பொருள் குறித்த 69வது ஆணையத்தில் ஆசியான் கூட்டறிக்கையை வெளியிடுவதற்குச் சிங்கப்பூர் முன்மொழிகிறது. ‌ஷங்ரிலா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற 46வது ஆசியான் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) பேசினார்.

“போதைப்பொருளற்ற ஆசியானை உருவாக்கும் நோக்கத்தில் நாம் கொண்டுள்ள கடப்பாட்டைக் கூட்டறிக்கை மறுவுறுதிப்படுத்தும். போதைப்பொருள் புழக்கத்தை ஏற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்துவருவது குறித்த நம் அக்கறையையும் அது வெளிப்படுத்தும்,” என்று அவர் சொன்னார்.

போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்துவதோடு குற்றங்களைத் தடுக்கும் நோக்கம் கொண்ட ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அலுவலகமாக ஆணையம் செயல்படுகிறது.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம், போதைப்பொருள்களுக்கு எதிரான அணுகுமுறை, உள்நாட்டில் கட்டுப்படுத்தப்படுவதோடு நின்றுவிடக்கூடாது என்றார். அதில் வட்டார முயற்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று திரு சண்முகம் சொன்னார்.

சிங்கப்பூரில் போதைப்பொருள்களுக்கு எதிராகக் கடும் சட்டதிட்டங்கள் உள்ளன. அதன் காரணமாக இங்கு அத்தகைய கும்பல்களால் செயல்படமுடியவில்லை என்றும் பிரச்சினை கட்டுக்குள் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள்கள் ஊடுருவுவதைத் தடுக்க மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு 2024ஆம் ஆண்டில் சோதனைச்சாவடிகளில் 1,000க்கும் மேற்பட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அவற்றின் மூலம் 25க்கும் அதிகமான வட்டார போதைப்பொருள் கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.

“நம் வட்டாரத்தில் இயங்கும் கும்பல்களில் அவை ஒரு சிறு பகுதியே என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை,” என்றார் திரு சண்முகம். போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த வட்டார அளவில் கூடுதல் முயற்சிகளும் தேவை என்று அவர் சொன்னார்.

“போதைப்பொருள் கடத்தல் என்பது எல்லைதாண்டிய குற்றம். சட்டத்தில் எங்கெங்கு ஓட்டை இருக்கிறதோ எல்லைக்குள் அத்துமீறி நுழைய எங்கெங்கு வழியிருக்கிறதோ எங்கெங்குப் பலவீனமான கட்டமைப்புத் தென்படுகிறதோ அங்கெல்லாம் போதைப்பொருள் கும்பல்கள் ஊடுருவி மக்களுக்குப் போதைப்பொருள்களைக் கொண்டுசேர்க்க முனைவார்கள்,” என்று திரு சண்முகம் கூறினார்.

போதைப்பொருள்களால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் ஆசியான் தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி அனுசரிக்கும் பரிந்துரையையும் சிங்கப்பூர் முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அன்றைய நாள் போதைப்பொருள் புழக்கத்துக்கும் சட்டவிரோதக் கடத்தலுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைத்துலக தினமாக அனுசரிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை போதைப்பொருள்களால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்கிறது. முதன்முதலில் அது சென்ற ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

“போதைப்பொருள்களால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர அனைத்துத் தரப்புச் சிங்கப்பூரர்களும் அன்றைய தினம் ஒன்றுகூடுவார்கள். ஆசியான் அளவில் அத்தகைய தினத்தை அனுசரிப்பது போதைப்பொருள்களால் ஏற்படும் கடும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் என நம்புகிறோம்,” என்றார் திரு சண்முகம்.

குறிப்புச் சொற்கள்