தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்: சட்ட மாற்றங்களுக்கு வல்லுநர்கள் வேண்டுகோள்

2 mins read
71542dca-8ce4-4dad-8d8c-005000495a8d
சிங்கப்பூரில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட் பொருள்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கையாள சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மாற்றங்களைக் கொண்டுவருமாறு வல்லுநர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் அதிகம் கண்டறியப்பட்டு வருவதைத் தொடர்ந்து வல்லுநர்கள் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘எனஸ்தெட்டிக் எட்டோமிடேட்’ (anaesthetic etomidate) என்றழைக்கப்படும் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதனால் மின்சிகரெட் பழக்கத்தைக் கையாள சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று அரசாங்கம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) அறிவித்தது.

அதனையடுத்து வல்லுநர்கள் இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றனர்.

இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான யிப் ஹோன் வெங், இதன் தொடர்பிலான சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார். அதேவேளை, உலகளவில் ஆகக் கடுமையான போதைப்பொருள் தடுப்பு சட்டங்கள் இருக்கும் பகுதிகளில் சிங்கப்பூர் ஒன்று என்பதையும் அவர் சுட்டினார்.

“எனினும், நிலவரம் மாறும்போது நமது சட்ட திட்டங்களும் மாறவேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் துறைத் தலைவரான (dean) பேராசிரியர் டியோ யிக்-யிங், செயற்கை போதைப்பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தற்போதைய சட்டங்கள் இருக்க வேண்டும் என்று விளக்கினார்.

மின்சிகரெட் பயன்பாடு சிங்கப்பூரில் கடந்த 2018ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. அப்படியிருந்தும் சென்ற ஆண்டு ஜனவரியிலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 41 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள மின்சிகரெட்டுகளை சுகாதார அறிவியல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

2019ஆம் ஆண்டு 95,460 மதிப்பிலான மின்சிகரெட்டுகள்தான் பறிமுதல் செய்யப்பட்டன.

சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் உதவி பேராசிரியரான இவெட் வேன் டெர் எய்க், மற்ற நாடுகளிலிருந்து வரும் மின்சிகரெட்டுகள் அப்பழக்கம் இவ்வளவு பரவலானதற்குக் காரணம் என்றார்.

“எடுத்துக்காட்டாக, இந்தோனீசியாவைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் மின்சிகரெட்டுகளை விளம்பரப்படுத்தினால் அப்பதிவு(கள்) இளம் சிங்கப்பூரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம்,” என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்