ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள வீடு ஒன்றின் அஞ்சல் பெட்டியில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) வெண்ணிற மர்மத் தூள் ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து ஏறத்தாழ 20 பேர் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
42 சேண்டர்ஸ் ரோட்டில் உள்ள வீட்டின் அஞ்சல் பெட்டியில் காணப்பட்ட அஞ்சல் உறை ஒன்றில் அந்தத் தூள் இருந்ததாக மாலை 5.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்து என காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் சிறப்புப் பிரிவினர் அந்த உறையை பத்திரமாக மீட்டனர்.
பல்வேறு விதங்களில் அந்தத் தூளைப் பரிசோதித்த அதிகாரிகள், உயிருக்கு ஆபத்தான வகையில் எதுவும் அதில் இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.
இருப்பினும், உறைக்குள் இருந்த பொருள் போதைப்பொருள் தொடர்பானது என நம்பப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல்துறை கூறியது.
அஞ்சல் உறையில் மர்மத் தூள் இருப்பதாகத் தகவல் பரவியதும் அக்கம்பக்க வீடுகளில் இருந்த ஏறத்தாழ 20 பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்னர்.
சம்பவம் தொடர்பாக யாருக்கும் காயம் இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்தின் ஒரு பகுதி விசாரணைக்காக இரவு 7 மணிவரை தடுப்புகளால் மறைக்கப்பட்டு இருந்ததாக சாவ் பாவ் சீன நாளிதழ் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

