இஸ்கந்தர் புத்ரி: சிங்கப்பூரர் ஒருவர், ஜோகூர்பாருவில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டி வீட்டில் 21,000 ரிங்கிட் மதிப்புள்ள (S$6,300) போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த, 39 வயது சந்தேக நபர் பிப்ரவரி 12ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
“அடுக்குமாடி வீடு ஒன்றில் சந்தேக நபர் 1.7 கிலோ ஹெராயின், 67.13 கிராம் சியாபுடன் பிடிபட்டார்.
“போதைப் பொருள் மற்றொரு நாட்டுக்குக் கடத்தப்படுவதாக இருந்தது என நம்புகிறோம். எந்த நாடு என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,” என்று காவல்துறை மேலும் கூறியது.
பிப்ரவரி 17ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காவல்துறை, 21,106 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் 17,000க்கும் மேற்பட்டவர்களைப் போதைப் புழங்கிகளாக்கும் என்றது.
சந்தேக நபரின் கார், கைக்கடிகாரம் ஆகியவற்றையும் கைப்பற்றியிருக்கிறோம். இதனால் கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 53,656 ரிங்கிட்டாகியுள்ளது என்று த ஸ்டார் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலையிலிருந்து இதர சில பேருடன் சந்தேக நபர் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளதாக நம்புகிறோம் என்றது காவல்துறை.