போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
டிரிஸ்டன் டான் யி ருய், 33, என்ற அந்த ஆடவர் 337.6 கிராம் மெத்தம்ஃபெட்டமைன் கடத்தியது உறுதிப்படுத்தப்பட்டதால் அவருக்குக் கடந்த 2023 பிப்ரவரி மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதனை உறுதிசெய்தது.
இந்நிலையில், அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில், டானின் கருணை மனுவை ஏற்று, அதிபர் தர்மன் சண்முகரத்னம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) அவரை மன்னித்தருளி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததாக உள்துறை அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
டானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏற்புடையதே என்று அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
“ஆயினும், வழக்கு தொடர்பான குறிப்பிட்ட சில உண்மைகள், சூழல்களின் அடிப்படையில் டானுக்கு மன்னிப்பு வழங்குவதெனப் பரிந்துரைக்கப்பட்டது,” என்று அமைச்சு தெரிவித்தது.
மத்திய போதைப்பொருள் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் டான் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கோரியும் அவருக்கு அத்தண்டனை விதிக்கப்படவில்லை.
“இதனையடுத்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு இடையிலான வேற்றுமையைக் குறைப்பதற்காக மன்னிப்பு வழங்கப் பரிந்துரைப்பதென அமைச்சரவை முடிவுசெய்தது,” என்று உள்துறை அமைச்சு விளக்கமளித்தது.
தொடர்புடைய செய்திகள்
தெம்பனிசில் கடந்த 2018 செப்டம்பர் 18ஆம் தேதி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் டான் கைதுசெய்யப்பட்டார்.
அப்போது, வெள்ளைநிற வோக்ஸ்வேகன் காரின் ஓட்டுநர் இருக்கையில் டான் இருந்ததாகவும் அதன் முன்னிருக்கையில் இன்னொரு பயணி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
காரில் 499 கிராம் படிகப்பொருளுடன் கூடிய ஒரு பொட்டலம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனைப் பகுப்பாய்வு செய்தபோது அதில் குறைந்தது 337.6 கிராம் மெத்தம்ஃபெட்டமைன் இருந்தது கண்டறியப்பட்டது.