“சிஎல்டிபிஏ” (CLTPA) எனப்படும் குற்றவியல் சட்டத்தின்கீழ் (தற்காலிக நிபந்தனைகள்) சிங்கப்பூரர் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்கு விசாரணையின்றி தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறை அமைச்சு பதில் அளித்தது. சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டுள்ள பென்னி கீ சூன் சுவான், தடுப்புக் காவலில் வைக்கப்படவேண்டும் என்ற உத்தரவை உள்துறை அமைச்சர் க. சண்முகம் செப்டம்பர் 22ஆம் தேதி பிறப்பித்தார் என்று அமைச்சு தெரிவித்தது.
அரசு வழக்கறிஞர்கள் குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களை முன்வைக்க முடியவில்லை என்பதே இந்தத் தடுப்புக் காவலுக்கான காரணம் என்றும் அமைச்சு விளக்கியது.
இந்தச் சட்டம் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு அஞ்சி சாட்சிகள் ஆதாரங்களைத் தர மறுக்கும் சூழலில் பயன்படுத்தப்படுகிறது .
பொதுவாக போதைப்பொருள் சார்ந்த குற்றங்கள் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் (Misuse of Drugs Act) விசாரிக்கப்படும். ஆயினும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணையை தொடர முடியாத நிலையில் சிஎல்டிபிஏ சட்டம் அமலாக்கப்படுகிறது எனவும் அமைச்சு விவரித்தது.
அந்த சட்டத்தின்படி, பொதுமக்களின் பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, குற்றவாளியை 12 மாதங்கள் வரையில் தடுப்புக்காவலில் சட்ட அமைச்சர் வைக்க முடியும். எந்த நேரத்திலும் அதிபரின் உத்தரவுடன் ஆணை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்படவும் முடியும்.
சிங்கப்பூரில் மெட்டம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கு செப்டம்பர் 8ஆம் தேதி தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்ட கீ , அதே நாளில் சிஎல்டிபிஏ சட்டப்படி கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்த 2020 முதல் கீ முக்கிய காரணமாக இருந்ததாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இரு வேறு கடத்தல் குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘சிஎல்டிபிஏ’ எனப்படும் குற்றவியல் சட்டம் (தற்காலிக நிபந்தனைகள்) 1955ஆம் ஆண்டில் நடப்புக்கு வந்தது.