துவாஸ் சோதனைச்சாவடியில் சுங்கத்துறைச் சோதனைகளைத் தவிர்க்க முயன்ற மலேசிய ஆடவர்கள் இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) கைது செய்யப்பட்டனர்.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட கார், பிற்பகல் 2.45 மணியளவில் சோதனைச்சாவடிக்கு அருகே அனுமதிக்கப்படாத இடத்தில், யு-வளைவில் சென்றதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் புதன்கிழமை (பிப்ரவரி 25) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அந்த ஓட்டுநர் பின்னர் மலேசியாவை நோக்கிப் போகும் பாதையில் போக்குவரத்துக்கு எதிராக ஓட்டியதன் மூலம் சாலையைப் பயன்படுத்துவோருக்கு அபாயம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த காரை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பிறகு அந்த கார் மலேசியாவை நோக்கிச் செல்லத் தொடங்கியபோது சிங்கப்பூர் அதிகாரிகள், மலேசியாவின் காம்ப்ளெக்ஸ் சுல்தான் அபு பக்கார் (கேஎஸ்ஏபி) அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினர். அதே கார் பிற்பகல் மூன்று மணிக்கு மீண்டும் துவாஸ் சோதனைச்சாவடிக்கு வந்தபோது சாவடி உடனடியாக முடக்கப்பட்டது என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
அந்த கார் வேகமாகச் சென்று தடுப்பு ஒன்றைச் சேதப்படுத்தியது. பின்னர் அது நிறுத்தப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அதிகாரிகள் அந்த காரை உடனடியாகத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மலேசியர்களான காரின் 40 வயது ஓட்டுநரும் அதிலிருந்த 53 வயது பயணியும் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஆண்கள்.
காரில் போதைப்பொருள்களும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட மற்றப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் காரின் ஓட்டுநரிடம் தேவையான பயண உரிமம் இல்லை.

