வட்டாரத்தில் நிலவும் புகைமூட்டத்திலும் செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் அடிக்கடி மழை பெய்தது. அதற்கு மாறாக அக்டோபர் மாதம் வறண்ட வானிலையை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வியாழக்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட அதன் அறிக்கையில் அன்றாட வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கும் 35 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் எனவும் சில நாள்களில் 35 டிகிரி செல்சியசுக்கு மேலாகவும் இருக்கும் என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.
ஆகவே வசதிக்கேற்ப உடைகளை அணிந்துகொள்வதோடு குடிப்பதற்குத் தேவையான தண்ணீரைக் கையில் வைத்துக்கொள்ளும்படி பொதுமக்களை ஆய்வகம் கேட்டுக்கொண்டது.
மாதத்தின் முதல் வாரத்தில் மிதமான வானிலை இருக்கும் என்று இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிடும் அதன் கணிப்புகளில் ஆய்வகம் குறிப்பிட்டது.
மாதத்தின் முதல் பாதியில் மொத்த மழையின் அளவு வழக்கத்தைவிடக் குறைவாகவே தீவு முழுவதும் இருக்கும். முந்தைய இரு வாரங்களுடன் ஒப்பிடுகையில் வானிலை வறண்டு காணப்பட்டாலும், காலை நேரங்களின் பிற்பகுதியிலும் மதிய வேளையிலும் சில நாள்களில் மழைபெய்யலாம் என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சில இரவுகள் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருப்பதோடு, வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் இருக்கலாம் என்று ஆய்வகம் குறிப்பிட்டது.
செப்டம்பர் மாத இரண்டாம் பாதியில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்துள்ளதாக ஆய்வகம் பதிவிட்டுள்ளது.
