குறைவான நேரம் இயங்கவுள்ள டெளன்டவுன், தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில் சேவைகள்

குறைவான நேரம் இயங்கவுள்ள டெளன்டவுன், தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில் சேவைகள்

1 mins read
0222b3df-0035-450d-b882-04697c1ff92c
ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதைப் பகுதி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

புதிய ரயில் நிலையங்களையும் பாதைகளையும் திறக்க வகைசெய்ய வரும் மாதங்களில் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் (டிஇஎல்), டெளன்டவுன் ரயில் பாதைகளில் (டிடிஎல்) சேவை நேரம் குறைக்கப்படும்.

வரும் மே 22ஆம் தேதியிலிருந்து தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதையிலும் ஜூலை 10ஆம் தேதியிலிருந்து டெளன்டவுன் பாதையிலும் ரயில் சேவை குறைவான நேரத்துக்கு வழங்கப்படும். தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் ஐந்தாம் கட்டமும் டெளன்டவுன் பாதையின் நீட்டிக்கப்பட்டுள்ள பகுதியும் இவ்வாண்டின் பிற்பாதியில் திறக்கப்படவுள்ளன.

அவை திறக்கப்படுவதற்கு முன்பு நிலப் போக்குவரத்து ஆணையமும் ரயில் நிறுவனங்களும் அவ்விரு பாதைகளிலும் சோதனைகளை நடத்தவிருக்கின்றன. எஸ்எம்ஆர்டி, தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதையை இயக்குகிறது. எஸ்பிஎஸ் டிரான்சிட், டெளன்டவுன் பாதையை இயக்குகிறது.

பயணிகளுக்கு வசதியாக இருக்க மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளும் வழங்கப்படும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய மூன்றும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) தெரிவித்தன.

மே மாதம் 22ஆம் தேதியிலிருந்து வரும் ஜூலை நான்காம் தேதிவரை தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் ரயில் சேவைகள் வெள்ளிக்கிழமைகளில் இரவு நேரத்தில் சற்று முன்னரே 11.30 மணிக்கு முடியும். சனிக்கிழமைகளில் சற்று தாமதமாக காலை எட்டரை மணிக்குத் தொடங்கும்.

டெளன்டவுன் பாதையிலும் ஜூலை 10 முதல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை ரயில் சேவை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு முடிவடைந்து சனிக்கிழமைகளில் காலை 8.30 மணிக்குத் தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்