தெம்பனிஸ் ரயில் நிலையத்தில் டுரியான்

2 mins read
2757fcb0-fd5e-480a-8fae-7224a0e0f920
சிங்கப்பூரில் மேலும் மூன்று கூட்டுரிமைக் குடியிருப்புகளிலும் தானியங்கி டுரியான் விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. - படம்: காக்கி காக்கி

கிழக்குப் பகுதியில் வசிக்கும் டுரியான் விரும்பிகள் இனி எளிதான முறையில் தங்களுக்குப் பிடித்தமான பழத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

உள்ளூர் டுரியான் விற்பனையாளரான ‘காக்கி காக்கி’ திங்கட்கிழமை (ஜனவரி 20) ‘மாவ் ஷான் வாங்’ வகை டுரியான் பெட்டிகளைக் கொண்ட தானியங்கி விற்பனை இயந்திரத்தை தெம்பனிஸ் ரயில் நிலையத்தில் பொருத்தவுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 400 கிராம் டுரியான் உள்ளது. அதன் விலை $38. இருப்பினும், ஜனவரி 24 முதல் பிப்ரவரி 12 வரையிலான காலகட்டத்தில் சிறப்பு சலுகையாக அது $18.88க்கு மட்டுமே விற்கப்படுகிறது.

டுரியான்கள் ஒவ்வொரு நாளும் நிரப்பப்படும். விற்கப்படாத பழங்கள் சாறாக (puree) மாற்றப்படும். அவை கேக்குகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

டுரியான் விற்பனையில் பத்தாண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள அந்த நிறுவனம், உயர்தர, கையால் அள்ளப்பட்ட டுரியான்கள் மேலும் எளிதில் கிடைப்பதை உறுதிசெய்வது திட்டத்தின் நோக்கம் என்று கூறியது.

சிறப்புச் சலுகைக் காலகட்டத்தில் தானியங்கி விற்பனை இயந்திரத்திலிருந்து டுரியான் வாங்கும் வாடிக்கையாளர்கள், ‘காக்கி காக்கி அங் பாவ்‘ குலுக்கில் வெற்றிபெறுவது நிச்சயம். $50 வரை பெறுமானமுள்ள பரிசுகளிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். மேல்விவரம் அறிய, ‘ kakikaki.shop’ இணையத்தளத்திற்குச் செல்லலாம்.

‘காக்கி காக்கி‘ நிறுவனம் தியோங் பாருவிலும் ஒரு கடையை நடத்துகிறது. அது, தானியங்கி விற்பனை இயந்திரத் திட்டத்தை சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. ஜூரோங் ஈஸ்டில் உள்ள ‘பார்க் ஓஏசிஸ்‘, தானா மேராவில் உள்ள ‘காசா மேரா‘, செம்பவாங்கில் உள்ள ‘ஸ்காய்பார்க் ரெசிடன்சஸ்‘ ஆகிய கூட்டுரிமை அடுக்குமாடிக் கட்டடங்களில் அந்தத் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்