சிங்கப்பூரில் பல அடுக்கு கொண்ட விவசாயத்தில் பல உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுவரும் நிலையில், தற்பொழுது ஹாலந்து நாட்டின், வேளாண் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும், குரோவி என்ற நிறுவனமும் இதில் ஈடுபட்டுள்ளது.
'சாங்கி லாஜிஸ்டிக்ஸ் சென்டர்' என்ற தளவாட மையத்தில் இருக்கும் அந்த நிறுவனத்தின் பல அடுக்குக் தோட்டம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் காய்கறிகளை உற்பத்தி செய்யும்போது, அது ஆண்டொன்றுக்கு 500 டன் அளவிலான காய்கறிகளை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டது என்று கூறப்படுகிறது. இது 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்கான உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை பூர்த்தி செய்யும் இலக்குக்கு ஆதரவு அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
குரோவி நிறுவனம் தனது 8,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தோட்டத்தில் சாலட் உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் இலைக் காய்கறிகள், மூலிகைகள் உட்பட அனைத்துவிதமான காய்கறிகளையும் விளைவிக்க எண்ணம் கொண்டுள்ளது.
இதன் தொடர்பில் பல அடுக்கு காய்கறித் தோட்டக்கலையில் குரோவி நிறுவனம் ஆராய்ச்சி, மேம்பாட்டைக் குறிவைத்து ஹாலந்து, சிங்கப்பூரிலுள்ள பல முன்னணி அமைப்பு
களுடன் ஏப்ரல் 10ஆம் தேதி புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.
"இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹாலந்து நாட்டின் தோட்டக்கலை நிபுணத்துவத்துக்கும் சிங்கப்பூரில் தழைத்தோங்கி
வரும் உணவுப் பாதுகாப்பில் ஆராய்ச்சி, மேம்பாட்டு முறையையும் இணைக்கும் பாலமாக விளங்கும்.
"இந்த இரண்டு அறிவியல் நிலையங்களையும் ஒன்றிணைப்பது சிங்கப்பூரிலும் அதற்கு அப்பாலும் பல அடுக்கு விவசாயத்தை விரிவுபடுத்த உதவும்," என்று குரோவி நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவருமான திரு ஆர்ட் வான் டி கிரீக் விளக்கம்அளித்தார்.
சிங்கப்பூர் கடந்த 2019ஆம் ஆண்டு, 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூர் வேளாண் துறை மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தது.
இந்த இலக்கை எட்ட பல அடுக்குகள் கொண்ட விவசாயத் தோட்டம் இன்றியமையாதது.
நிலப்பரப்பில் விவசாயத்திற்கென 1 விழுக்காட்டுக்கும் குறைவான நிலப்பரப்பே உள்ள நிலையில், சிங்கப்பூர் உணவு உற்பத்தியில் தொழில்நுட்பத்தை நாடியுள்ளது.

