டுயூ பயண முகவையின் உரிமம் ரத்து

1 mins read
26020eae-424c-40a9-a6d2-457a5384d1a0
டுயூ பயண முகவை சமர்ப்பித்த நிதி அறிக்கையின் உண்மைத்தன்மை சந்தேகப்படும்படி இருப்பதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

டுயூ பயண முகவையின் உரிமத்தைச் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ரத்து செய்துள்ளது.

அந்த நிறுவனம் சமர்ப்பித்த நிதி அறிக்கையின் உண்மைத்தன்மை சந்தேகப்படும்படி இருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பயண முகவை தொடர்பான பணிகளில் ஈடுபட டுயூ பயண முகவைக்கு அனுமதி இல்லை.

அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான செய்தி வியாழக்கிழமை (டிசம்பர் 4) வெளியிடப்பட்டது.

வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொண்ட பணத்தை அந்நிறுவனம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற உரிமம் பெற்ற இன்னொரு பயண முகவையிடம் அவர்கள் தொடர்பான பயணத் திட்டங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கழகம் கூறியது.

கடந்த சில ஆண்டுகளாக டுயூ பயண முகவை பொய்க் கணக்கு காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள், சேவை வழங்கியோர் ஆகியோருக்குச் சொந்தமான பணம் தன்னிடம் இல்லை என்று டுயூ பயண முகவை தெரிவித்துள்ளது. முன்பதிவுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக அது கூறியது. புதிய முன்பதிவுகளை டுயூ பயண முகவை ஏற்கவில்லை என்று அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

“அதிகாரிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துகிறோம்,” என்றார் அவர்.

உரிமத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்