டைசன் (Dyson) நிறுவனம் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் ஆட்குறைப்பு செய்யப்போவதாகத் தனக்குத் தகவல் அனுப்பியது என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆட்குறைப்பு குறித்து ஊழியர்களுக்குத் தெரிவித்தவுடன் அந்நடவடிக்கை இடம்பெறுவதற்கு முன்பு வரும் ஐந்து நாள்களுக்குள் மனிதவள அமைச்சிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. டைசன் அவ்வாறே செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் ஒன்றாம் தேதியன்று அந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்தது.
ஆட்குறைப்பு செய்வற்கு ஒரு நாளுக்கு முன்னர்தான் டைசன் தங்களுக்குத் தகவல் தெரிவித்தது என்று மின்பொருள், மின்தொழில்துறைகள் ஊழியர் சங்கம் (UWEEI) சாடியது. குறிப்பிடப்படாத எண்ணிக்கையில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (NTUC) தோழமை அமைப்பான மின்பொருள், மின்தொழில்துறைகள் ஊழியர் சங்கம், இந்த விவகாரத்தை மனிதவள அமைச்சிடம் கொண்டு சென்றதாகக் கூறியிருந்தது. எனினும், ஆட்குறைப்புக்கு முன்னர் எப்போது சங்கத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது பேச்சுவார்த்தைகளின்வழி மாற்றப்படலாம் என்று மனிதவள அமைச்சு சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட டைசன் ஊழியர்கள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (PMEs) பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது அதற்குக் காரணம் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஊழியரணியைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் அவர்களை ஊழியரணி பிரதிநிதிக்காது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

