சிங்கப்பூர் ஆயுதப் படையும் உள்துறைக் குழுவும் மின்சிகரெட்டுகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ராணுவ முகாம்கள், தளங்கள், பயிற்சிக் கழகங்கள் ஆகியவற்றில் மின்சிகரெட்டுகளுக்கு எதிரான சோதனை நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
தடைசெய்யப்பட்ட பொருள்கள், சட்டவிரோதப் பொருள்கள் ஆகியவற்றுக்காக வீரர்களின் பைகள் சோதிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சு ஃபேஸ்புக்கில் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) பதிவிட்டது. வீரர்களிடையே சிறுநீர் பரிசோதனைகளும் நடத்தப்படுவதை அது சுட்டியது.
மின்சிகரெட்டைக் கைவிட முற்படும் வீரர்களுக்கு உதவ தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் ஆலோசனைகளையும் வழிகாட்டிகளையும் வழங்குகின்றன. உதவித் தேவைப்படுவோர் மேல் அதிகாரியையோ மருத்துவ அதிகாரிகளையோ நாடும்படி அவை அறிவுறுத்தின.
“மின்சிகரெட் அல்லது தடைசெய்யப்பட்ட பொருள்கள் வைத்திருந்ததற்காகப் பிடிபடும் வீரர்கள்மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்புக் காவலிலும் வைக்கப்படுவதும் அதில் அடங்கும்,” என்று குறிப்பிட்ட தற்காப்பு அமைச்சு, மின்சிகரெட்டுகளை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் ராணுவ ஒழுங்கை மீறும் செயல் என்றது.
சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் உள்துறைக் குழுப் பயிற்சிக் கழகம், குடிமைத் தற்காப்புப் பயிற்சிக்கழகம் ஆகியவற்றில் உள்ள பள்ளிகளில் தீவிர சோதனைகள் நடத்தியுள்ளன.
ஆகஸ்ட் 24ஆம் தேதி கழகத்தில் தங்கியிருந்த பயிற்சி வீரர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல்துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 27) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.
மின்சிகரெட்டுடன் கண்டுபிடிக்கப்படும் வீரர்கள் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் அத்தகையோர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

