மின்சிகரெட் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 12 சிங்கப்பூரர்களை அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மலேசியாவிலிருந்து மின்சிகரெட் மற்றும் மின்சிகரெட் சார்ந்த பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கடத்தி வந்து விநியோகம் செய்யும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 16) கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சிங்கப்பூர் காவல்துறையும் சுகாதார அறிவியல் ஆணையமும் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 64,000 மின்சிகரெட்டும் அது சார்ந்த பொருள்களும் பிடிபட்டன. அவற்றின் மதிப்பு 560,000 வெள்ளியாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் ஆண்கள், மற்றொருவர் பெண். அவர்களின் வயது 25க்கும் 35க்கும் இடைப்பட்டது. சந்தேக நபர்கள் சிங்கப்பூர் வாசிகளுக்கு மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நான்கு ஆடவர்களும் விநியோகத்திற்காக 12,364 மின்சிகரெட்டுகளை லென்டோர் லேனில் உள்ள ஒரு தரை வீட்டில் பதுக்கிவைத்திருந்தனர்.
மற்ற எட்டுப் பேரும் விற்பனைக்காக மின்சிகரெட்டுகளைத் தங்களுடன் வைத்திருந்தனர். அவர்களில் கென்னத் டான் என்னும் ஆடவர் மட்டும் தனியாளாக 4,573 மின்சிகரெட்டுகளை வைத்திருந்தார்.
கேன்பரா டிரைவில் உள்ள தனியார் கூட்டுரிமை வீட்டில் அவற்றை கென்னத் பதுக்கி வைத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் 16ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறையின் உளவுப் பிரிவு மற்றும் சிறப்புச் செயல்பாட்டுப் பிரிவும் இணைந்து அங் மோ கியோ அவென்யூ 5ல் சோதனையிட்டன. அப்போது மின்சிகரெட் கடத்தல் கும்பல் உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.
அதேபோல் அப்பர் ஜூரோங் ரோடு, கேன்பரா டிரைவ், செம்பவாங் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி மின்சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
சோதனையின்போது 16,000 வெள்ளி ரொக்கம், மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி, சிம் அட்டைகள், எட்டு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


