இளையர்களை ஈர்க்கும் விதமாக புளூடூத், மின்னிலக்கத் திரை போன்றவற்றைக் கொண்ட மின்சிகரெட் கருவிகளை மின்சிகரெட் விற்பனையாளர்கள் விற்பனை செய்கின்றனர்.
சில மின்சிகரெட்டுகளைக் கைப்பேசிகளாகவும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சிலவற்றைப் பயன்படுத்தி பாடல்களைக் கேட்க முடியும், இன்ஸ்டகிராம் மற்றும் டெலிகிராம் தளங்களைப் பயன்படுத்த முடியும்.
மின்சிகரெட் விற்பனையாளர்கள், பயன்படுத்துபவர்கள் ஆகியோர் மீது சிங்கப்பூரில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், கையிருப்பு அதிகம் இருப்பதாக விற்பனையாளர்கள் கூறுவதாகத் தெரியவந்துள்ளது.
மின்சிகரெட்டுகளை இணையம் வழி விற்பதில் மின்சிகரெட் விற்பனையாளர்கள் தீவிரம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சிகரெட்டுகளை அதிக அளவில் வாங்கினால் தள்ளுபடி வழங்கப்படுவதுடன் சிங்கப்பூரில் எந்த இடமாக இருந்தாலும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றும் விற்பனையாளர்கள் இணையம் மூலம் தெரிவிக்கின்றனர்.
சிறுவர்கள், இளையர்களை ஈர்க்க அவர்களுக்குப் பிடித்தமான அம்சங்களை மின்சிகரெட் கருவிகளில் சேர்க்கின்றனர்.
உதாரணத்துக்கு, பிரபல திரைப்படத்தில் வரும் கேலிச்சித்திரக் கதாபாத்திரத்தின் படத்தைக் கொண்ட மின்சிகரெட் கருவிகளும் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமல்லாது, பல்சுவை, பல வடிவங்கள் கொண்ட மின்சிகரெட்டுகளும் விற்கப்படுகின்றன.
“மின்சிகரெட்டுகள் தொடர்பான அபாயங்கள் எங்களுக்குத் தெரிய வருகிறது. அவை தீங்கு விளைவிப்பவை என எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். மின்சிகரெட்டுகள் பலவகையான வடிவங்களில் இருப்பதால் மின்சிகரெட்டுகளுக்கும் கல்விக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில் சிக்கல் உள்ளது. இத்தகைய வடிவங்களைக் கொண்டு கருவிகள் இளையர்களை ஈர்க்கின்றன,” என்று திரு சலீம் தெரிவித்தார். திரு சலீமின் மகன் தொடக்கநிலை நான்கில் பயில்கிறார்.

