பிரதமரின் தேசிய தினச் செய்திக்கு வரவேற்பு

பிரதமரின் தேசிய தினச் செய்திக்கு வரவேற்பு

2 mins read
தமிழ் முரசின் ‘சந்திப்போம் சிந்திப்போம்’ கலந்துரையாடல்
183b48c0-5098-4af9-8fdf-4e35a39d1068
பிரதமரின் தேசிய தினச் செய்தி குறித்த ‘சந்திப்போம் சிந்திப்போம்’ தொடரின் கலந்துரையாடலில் பங்கேற்றோர். (இடமிருந்து) கலந்துரையாடலை வழிநடத்திய தமிழ் முரசின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா.முத்து நடராஜன், சமூகத் தலைவர் சீ லெச்சுமணன், லிஷாவின் துணைத் தலைவர் கீர்த்தி இராஜேந்திரன், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை மூன்றாமாண்டு மாணவர் அன்பு நவின். - படம்: த.கவி
Google News Preferred Icon

குடும்பங்களுக்கு அரசாங்கம் எத்தகைய ஆதரவைத் தரப்போகிறது என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாகச் சிங்கப்பூரர்கள் சிலர் கூறியுள்ளனர். பிரதமர் லாரன்ஸ் வோங், அதுகுறித்த விவரங்களைத் தேசிய தினப் பேரணி உரையின்போது அறிவிக்கப்போவதாக அவரின் தேசிய தினச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதனையும் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பிரதமரின் தேசிய தினச் செய்தி குறித்து எஸ்பிஎச் அரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) தமிழ் முரசு நடத்திய கலந்துரையாடலில் அந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

‘சந்திப்போம் சிந்திப்போம்’ எனும் நடப்பு விவகாரத் தொடரின் ஆறாம் கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.

மத்திய கிழக்குப் போருக்கு இடையிலும் அரசாங்கம் மக்களுக்குத் தொடர்ந்து உதவிவருவதாகப் பிரதமர் குறிப்பிட்டதை ஆமோதித்தார் சமூகத் தலைவர் சீ லெச்சுமணன். இக்கட்டான சூழல்களில் சிங்கப்பூரர்களுக்குப் பல்வேறு உதவிகளை அரசாங்கம் செய்துவருவதைத் திரு லெச்சுமணன் சுட்டினார்.

பிரதமரின் உரையில், பற்றுறுதி பற்றிப் பேசியதைக் குறிப்பிட்டுச் சொன்னார் லிஷாவின் துணைத் தலைவர் கீர்த்தி இராஜேந்திரன். தேசியப் பற்றுறுதியை எழுதியது தமிழர் என்பதில் எப்போதுமே தமக்குப் பெருமை என்றார் அவர்.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்ப அரவணைக்கும் என்று பிரதமர் கூறியதை வரவேற்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பயிலும் மூன்றாமாண்டு மாணவர் அன்பு நவின். நாட்டின் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தைத் தழுவுவது முக்கியம் என்று தாம் கருதுவதாக அவர் சொன்னார்.

செயற்கை நுண்ணறிவைப் பற்றி அஞ்சாமல், திறனை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் கூறினர். அவ்வாறு செய்வதன் மூலம் வேலைகளை எளிதாக்கிக்கொள்ளலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இவைபற்றியும் நாடு எதிர்நோக்கும் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்துப் பிரதமர் பேசியிருந்ததும் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

அதன் முழுமையான காணொளியை இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கலாம்: https://www.youtube.com/watch?v=miqgp1W9Fbk

குறிப்புச் சொற்கள்