ஆதிகால ஆசியர்கள் வட ஆசியாவிலிருந்து லத்தீன் அமெரிக்க கண்டத்துக்கு 20,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்தே சென்றிருக்கின்றனர்.
அதனால், ஆசியர்களுக்கும் லத்தீன் அமெரிக்கர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆசியர்கள் லத்தீன் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட தொலைதூர நடைபயணம், 13,000 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களில் மரபணு நிலவரத்தை மாற்றியமைத்தது.
முதன்முறையாக மனிதர்கள் இடம் மாறியது டிஎன்ஏ மரபணுக்கள் மூலம் ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் சயன்ஸ் எனும் அறிவியல் சஞ்சிகையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்பட்டன.
ஆய்வு முடிவுகள் சக ஆய்வாளர்கள்/விஞ்ஞானிகளால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தின் (American Association for the Advancement of Science) கல்வியாளர் சஞ்சிகையான சயன்ஸ், உலகின் முன்னணி கல்வியாளர் சஞ்சிகைகளில் ஒன்றாகும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் சுற்றுச்சூழல் வாழ்க்கை அறிவியல் பொறியியல் நிலையத்தைச் (எஸ்சிஇஎல்எஸ்இ) சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
மனிதகுலத்தின் ஆக நீளமான ஆதிகாலத்து இடமாற்றம் (humanity’s longest prehistoric migration) என்றழைக்கப்படும் அப்பயணத்தைப் பல தலைமுறை மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மேற்கொண்டிருப்பர்.
மனிதர்கள் இடம் மாறுவதில் இருக்கக்கூடிய போக்குகளைப் புரிந்துகொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளில் முறைகளில் காணப்படும் வேறுபாடுகளைத் புரிந்துகொள்ளலாம் என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலுக்கான ஆசிய பள்ளியைச் சேர்ந்த துணைப் பேராசிரியர் கிம் ஹியெ லிம் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கிம்மின் குழு, ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருடன் இணைந்து செயல்பட்டது. அந்த மருத்துவர், லத்தீன் அமெரிக்காவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடி மக்களின் ரத்தத்தைச் சேகரிக்க அங்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த ரத்தத்திலிருந்த மரபணுவை எடுத்து ஆய்வு மேற்கொண்டதாக பேராசிரியர் கிம் தெரிவித்தார்.
139 இனங்களைச் சேர்ந்த 1,537 தனிநபர்களின் மரபணுக்களைக் கொண்டு சில நோய்கள் குறிப்பிட்ட வம்சாவளியினரிடையே அதிகம் காணப்படுவதன் தொடர்பில் ஆராயப்பட்டது.

