ஈஸ்ட் கோஸ்ட் ‘லாங் ஐலண்ட்’ நீர்முகப்புத் திட்டம் ஜனவரியில் தொடக்கம்

ஈஸ்ட் கோஸ்ட் ‘லாங் ஐலண்ட்’ நீர்முகப்புத் திட்டம் ஜனவரியில் தொடக்கம்

பொதுமக்களிடம் கருத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெறும்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2026 - 7:28 pm

2 mins read

ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘லாங் ஐலண்ட்’ பெருந்திட்டத்தின் மேம்பாட்டுக்கான நிலமீட்பின் முதற்கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும்.

உலக அளவில் உயர்ந்துவரும் கடல்மட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக வரையப்பட்டுள்ள அத்திட்டத்தில் கடற்கரை மறுவடிமைப்பு, உடற்பயிற்சித் தடங்கள், நடைபாதை போன்ற பற்பல வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்படும்.

பலதரப்பட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கான வசதிகளை அது பாதிக்காது.

பிடோக் படகு முனையத்தில் (ஜெட்டி) பெருந்திட்டத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் 2029ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஏற்றுநடத்தவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகள் முடிவடைந்ததும் மேற்கொள்ளப்படும்.

பெருந்திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துப் பகிர்வுக்கான நிகழ்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறும்.

அடுத்த சில ஆண்டுகளில் பணிகள் படிப்படியாக நடத்தப்படும். அதன்படி காலத்தோடு திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் இறுதியான முழுமையடைந்த வடிவமைப்பை அப்பணிகள் முடிவுசெய்யாது என்று நகர மறுசீரமைப்பு ஆணையமும் (யுஆர்ஏ) வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் (வீவக) செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

ஈஸ்ட் கோஸ்ட் உட்பட அவ்வட்டாரக் கடலடியில் உள்ள பல்வேறு தடைகள் முதலில் அகற்றப்படும். அதன்பிறகு மண் அணைகள், மணல் நிரப்பப்பட்ட தடுப்புகள் போன்றவை அரண்களாக அப்பகுதியைச் சுற்றி தற்காலிகமாக அமைக்கப்படும்.

பொதுமக்கள் பாதுகாப்புக்கென பணிகள் நடக்கும் பகுதிகளில் கடலில் படகுகள் நிறுத்தி வைக்கப்படும். பணியிடங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, வண்டல் மண் தடுப்புத் திரைகள், மிதவைகள் போன்றவை எல்லைத் தடைகளாக அங்கு பொருத்தப்பட்டிருக்கும்.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடலைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பான தூரத்தை உறுதிசெய்வதோடு பணியிடங்களையும் நிறுத்திவைக்கப்படும் படகுகளையும் மிதவைகளையும் நெருங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

பணிகள் தொடங்குவதற்கு முன்பாக பாதுகாப்பு அறிவிப்புப் பதாகைகள் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் பூங்காவிலும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் இணையத்தளத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அந்த அறிவிப்புகளும் அவற்றில் உள்ளடங்கும் விவரங்களும் தேவைப்படும்போது புதுப்பிக்கப்படும்.

இயற்கைச் சூழலையும் அங்கு இயல்பாக நடக்கும் நடவடிக்கைகளையும் பாதிக்காத அளவு கட்டுமானப் பணிகளின் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும்.

நடவடிக்கைகளின் தாக்கத்தை அறிய, தண்ணீரின் தரம், மிதக்கும் வண்டல் மண்படிவுகளின் அளவு, சத்தம், தூசி, துகள் போன்றவற்றின் அளவுகளை அரசாங்க அமைப்புகள் கண்காணிக்கும்.

கடல்மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் இலக்கோடு இணைந்த 1991ல் வெளியிடப்பட்ட இந்த மேம்பாட்டுப் பணிகளின் வழியாக ஒரு புதிய நீர்த்தேக்கமும் எதிர்கால பயன்பாட்டுக்கான நிலமும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருந்திட்டம் குறித்து 2023 நவம்பர் மாதம் முதல் இதுவரையில் 15,000 பேர் அவர்களது கருத்துகளை அரசாங்க அமைப்புகளுடன் பகிர்ந்துள்ளனர். குழுக்களாக நடந்த ஆலோசனைகள், கண்காட்சிகள், இணையக் கருத்துக்கணிப்புகள் போன்றவற்றின் வழியாக இக்கணிப்பு நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்