ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் அக்டோபர் 3ஆம் தேதி பல வாகனங்கள் தொடர்பிலான விபத்து நேர்ந்ததில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் விரைவுச்சாலைக்கு அருகே, தஞ்சோங் காத்தோங் வெளிவழிக்கு முன்னர் விபத்து ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் மாலை 5.30 மணியளவில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
ஃபோர்ட் ரோடு வெளிவழி வரையிலும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக ஆணையம் சொன்னது.
நெடுஞ்சாலையின் முதல் இரண்டு தடங்களைத் தவிர்த்துவிடும்படி வாகனமோட்டிகளுக்கு அது ஆலோசனை கூறியது.
சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகளில் மூன்று டாக்சிகளும் ஐந்து கார்களும் விபத்துக்குள்ளானதைக் காணமுடிகிறது.
அவற்றில் இரண்டு கார்கள் மற்ற கார்களின்மேல் ஏறிய நிலையில் காணப்படுகின்றன. அவற்றுக்குக்கீழே சிவப்பு நிற டாக்சி ஒன்று முன்பக்கம் சேதமான நிலையில் நின்றிருப்பதையும் அதன் கதவுகள் திறந்துகிடப்பதையும் காண முடிகிறது.
அந்த டாக்சியின் பின்புறம் உள்ள கறுப்பு காரும் நசுங்கிய நிலையில் காணப்படுகிறது.
சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றிடம் மேல்விவரங்களுக்காகத் தொடர்புகொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

