ஈஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்கள் நன்கு தகவலறிந்த வாக்காளர்கள் என்றும் பேச்சாற்றலை வைத்து அல்லாமல், என்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அடிப்படையாக வைத்து முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள் என்றும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.
புளோக் 216 பிடோக் ஈரச்சந்தை, உணவு நிலையத்தில் வியாழக்கிழமை (மே 1) பிற்பகல் தொகுதி உலா மேற்கொண்டபோது திரு தினேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டுக்குப் பதிலாக திரு தினேஷ் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவருடன் துணைப் பிரதமர் ஹெங், பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், மற்ற நான்கு ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்கள் அங்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில், குறிப்பாக திரு ஹெங் பிரதிநிதித்த பிடோக் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள் குறித்து குடியிருப்பாளர்கள் பல்வேறு நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக திரு தினேஷ் குறிப்பிட்டார்.
“இங்கு பல்வேறு பணிகளும் மேம்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இளையர்களும் முதியோரும் ஒன்றாக அனுபவிக்கக்கூடிய உடற்பயிற்சி வசதிகளைக் கொண்ட பூங்காக்களும், குடியிருப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட தோட்டங்களும் மக்களிடையே பெருவரவேற்பைப் பெற்றுள்ளன,” என்றார் அவர்.
ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசிப்போர் மிகவும் நலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு தினேஷ், அவர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையைப் பாராட்டினார்.
“முதியவர்கள் பலர் மிதிவண்டி ஓட்டியோ, சொந்தமாக நடந்தோ காப்பிக் கடைகளில் கூடி காலை உணவு உண்பதை நான் தினமும் காண்கிறேன். இதுபோன்ற சிறந்த பழக்கங்களை மேலும் ஊக்குவிக்கும் பணிகளில் நான் ஈடுபட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.