சிங்கப்பூர் மருத்துவமனைகள் குடியிருப்பாளர்களின் நலனைப் பேணுவதில் முக்கிய பங்கு வகித்தாலும் தீவிரச் சிகிச்சையில் மட்டுமின்றி சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று சுகாதார மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் கூறியுள்ளார்.
நீண்டகால நோய்களைச் சமாளிப்பதில் மூத்தோருக்குக் கைகொடுத்தல், அத்தகையோர் குணமடையும்போது அவர்களுக்கான ஆதரவை வழங்குதல், வலுவான சமூக ஆதரவுக் கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்றவை அவற்றுள் அடங்கும் என்றார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சருமான திரு டான்.
அந்த வகையில் ஈஸ்டர்ன் பொது மருத்துவமனை (இஜிஎச்) அதைத் திறம்பட செய்துவருவதாகத் திரு டான் குறிப்பிட்டார்.
ஈஸ்டர்ன் பொது, சமூக மருத்துவமனைகள் ஒன்றிணைந்து சுகாதார விழாவை சனிக்கிழமை (மார்ச் 7) ஏற்பாடு செய்தன. அதில் திரு டான் பேசினார்.
“மருத்துவமனையின் வளாகம் 2029ஆம் ஆண்டுதான் திறக்கப்படும். ஆனால், எதிர்காலத்தில் சேவையாற்றவிருக்கும் குடியிருப்பாளர்களை இப்போதே அவை அணுகத் தொடங்கிவிட்டன,” என்றார் திரு டான்.
மோன்ட்ஃபோர்ட் பராமரிப்பு அமைப்பு, ஃபிலோஸ் சமூக நலன் நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு வட்டாரத்தில் உள்ள மூத்தோருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் உதவும் வகையில் பல திட்டங்களை இஜிஎச் உருவாக்கியுள்ளது என்றும் திரு டான் குறிப்பிட்டார்.
சுகாதாரப் பராமரிப்பு இன்னும் அறிவுத்திறன் வாய்ந்ததாக மாறவேண்டும் என்ற திரு டான், இஜிஎச் மருத்துவமனை ஈராண்டுக்குமுன் அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும்போது சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தொழில்நுட்பம் வழி பராமரிப்புச் சேவை வழங்கும் மருத்துவமனையாக அது திகழும் என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார்.
அந்த வகையில் இஜிஎச் மருத்துவமனை அறிவார்ந்த மருத்துவமனைக்கான பெருந்திட்டத்தை வெளியிட்டுள்ளது என்றார் திரு டான்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவமனையின் பெருந்திட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன என்ற அவர், அறிவார்ந்த பராமரிப்பு, அறிவார்ந்த செயல்பாடு, அறிவார்ந்த உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.
இஜிஎச் மருத்துவமனை மெய்நிகர் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதைச் சுட்டிய திரு டான், வென்கார்ட் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புடன் மருத்துவமனை தொலை சுகாதார ஒத்துழைப்பை அமைத்துள்ளதாகச் சொன்னார்.
மருத்துவமனை உருவாக்கப்பட்ட பின் அதில் மின்னிலக்க அம்சங்களையும் இயந்திர மனிதக் கருவிகளையும் எதிர்பார்க்கலாம். அதன்மூலம் மருத்துவமனையின் செயல்பாடுகள் தங்குதடையின்றி சுமுகமாக இயங்கும்.

