எதிர்பார்ப்பையும் மிஞ்சியபொருளியல் வளர்ச்சி

எதிர்பார்ப்பையும் மிஞ்சியபொருளியல் வளர்ச்சி

2 mins read
6570ad32-1d1b-4b01-bb15-3cace3beda21
ராய்ட்டர்ஸ் ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் கணித்திருந்த 3.8 விழுக்காடு வளர்ச்சி 3வது காலாண்டில் மிஞ்சிவிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, இவ்வாண்டின் 3வது காலாண்டில் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது.

முந்தைய காலாண்டின் 2.9 விழுக்காட்டுக்கு மேலாக 3வது காலாண்டில் 4.1 விழுக்காடு வளர்ச்சி கூடியிருக்கிறது.

ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட ஆய்வில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 3.8 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்தனர்.

ஆனால் அதையும் மிஞ்சி பொருளியல் வளர்ச்சி புதிய வேகமெடுத்துள்ளது.

காலாண்டு அடிப்படையில் பொருளியல் 2.1 விழுக்காடு விரிவடைந்தது என்று வர்த்தக, தொழில் அமைச்சு திங்கட்கிழமையன்று ( அக்டோபர் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இது, இரண்டாவது காலாண்டின் 0.4 விழுக்காட்டைவிட அதிகமாகும்.

பொருளியல் வேகமெடுத்ததற்கு உற்பத்தித் துறை மீண்டதே முக்கிய காரணம்.

அந்தத் துறை ஆண்டு அடிப்படையில் 3வது காலாண்டில் 7.5 விழுக்காடு விரிவடைந்தது.

இதற்கு முன்பு முந்தைய காலாண்டில் அது 1.1 விழுக்காடு சுருங்கியது.

உயிர்மருத்துவ துறை நீங்கலாக உற்பத்தித் துறையில் அனைத்துப் பிரிவுகளும் விரிவடைந்ததால் பொருளியல் வளர்ச்சி மேம்பட்டது.

ஆண்டு அடிப்படையில் கட்டுமானத் துறை 3.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது. ஆனால் இரண்டாவது காலாண்டின் 4.8 விழுக்காட்டிலிருந்து கட்டுமானத் துறையின் வளர்ச்சி சற்று மெதுவடைந்துள்ளது. பொதுத் துறையின் திட்டங்களால் இத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது.

சேவைத் துறையில் தகவல், தொடர்பு, நிதி, காப்புறுதி மற்றும் நிபுணத்துவ சேவைகள் உள்ளிட்டவை 4.3 விழுக்காடு வளர்ச்சி கூடியிருக்கிறது.

இருந்தாலும் இரண்டாவது காலாண்டின் 5.4 விழுக்காடு வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது குறைவு.

தகவல், தொழில்நுட்பம், தகவல் சேவைகள், தலைமையக அலுவலகம், வர்த்தகப் பிரதிநிதித்துவ அலுவலகம் போன்றவற்றால் சேவைத் துறையில் வளர்ச்சி கூடியிருக்கிறது.

குறிப்பாக வங்கி, நிதிச் சேவை தொடர்பான நடவடிக்கைகள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடவடிக்கை விரிவடைந்ததே நிதி மற்றும் காப்புறுதித் துறையின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.

ஒட்டுமொத்த, சில்லறை வர்ததகம், போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு உள்ளிட்டவை 3வது காலாண்டில் 3.5 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. இது, 2வது காலாண்டின் 3.9 விழுக்காட்டிலிருந்து கூடியிருக்கிறது. சில்லறைத் துறையில் மட்டுமே 3வது காலாண்டில் எந்தவித வளர்ச்சியையும் காண முடியவில்லை.

குறிப்புச் சொற்கள்