பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 6 விழுக்காடாக உயர்வு

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 6 விழுக்காடாக உயர்வு

அடுத்த ஆண்டில் 2.5% முதல் 4.5% வரை சற்று மெதுவடையக்கூடும்: எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு
கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 12:03 pm

2 mins read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த உற்பத்தி, ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் 2026ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னுரைப்பு 6 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடுவரை வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஏஐ முதலீடுகளின் வேகம் குறைவது, முக்கிய வணிகப் பங்காளி நாடுகளின் மந்தநிலை காரணமாக 2027ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி சற்று மெதுவடைந்து 2.5% முதல் 4.5% வரை பதிவாகலாம் என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஆண்டு அடிப்படையில், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 6.4 விழுக்காடாகப் பதிவான பொருளியல் வளர்ச்சி, மூன்றாம் காலாண்டில் 6.1 விழுக்காடு எனச் சற்றே குறைந்தது. பருவத்துக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட காலாண்டு அடிப்படையில் அது 1.8 விழுக்காட்டிலிருந்து 1.5 விழுக்காடாக மெதுவடைந்தது. இதனால், முதல் மூன்று காலாண்டுகளின் மொத்த வளர்ச்சி 6.2 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

பொருளியல் வளர்ச்சிக் கழகப் புள்ளிவிவரத்தின்படி, செப்டம்பரில் தொழிற்சாலை உற்பத்தி 3.4 விழுக்காடாகக் குறைந்தபோதிலும், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் மாத எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 79.8 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் உற்பத்தித் துறை 8.5 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. வேதிப்பொருள், உயிர்மருத்துவத் துறைகளில் சரிவு ஏற்பட்டாலும், வலுவான உலகளாவிய ஏஐ தேவையால் மின்னணு, துல்லியப் பொறியியல் துறைகள் கைகொடுத்தன.

அதேபோல், மொத்த வணிகத் துறை 14.5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. ஈரான் போரினால் ஏற்பட்ட எண்ணெய் விநியோகத் தடையால் எரிபொருள், வேதிப்பொருள் வணிகம் பாதிக்கப்பட்டபோதும், ஏஐ சார்ந்த கணினி, மின்னணு உதிரிபாகங்களின் மொத்த விற்பனை இத்துறையைத் தூக்கி நிறுத்தியது.

தரவு நிலையங்களின் கட்டுமானம் எதிர்பார்த்ததைவிட வலுவாக உள்ளதால், இந்த ஆண்டில் ஏஐ சார்ந்த உற்பத்தி, ஏற்றுமதி வேகம் தொடரும் என்று அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்