தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘2025ல் பொருளியல் வளர்ச்சி அதிகரிக்கும்; பணவீக்கம் குறையும்’

2 mins read
ஆட்சேர்ப்பும் அதிகரிக்குமென சிங்கப்பூர் நாணய ஆணையம் முன்னுரைப்பு
0007b473-849d-450e-969e-618564a8ae3e
புவிசார் அரசியல், வர்த்தகப் பதற்றங்களால் சிங்கப்பூரின் வளர்ச்சியும் பணவீக்க விகிதமும் பாதிக்கப்படக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் எச்சரித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நிறுவனங்களின் நிதி நிலைமையும் ஆட்சேர்ப்புத் திறனும் இந்த ஆண்டின் (2024) எஞ்சிய நாள்களிலும் அடுத்த ஆண்டிலும் அதிகரிக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.

உலகளாவிய நிலையில் பொருளியல் நிலவரம் மேம்பட்டு வருவதால் சிங்கப்பூர் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்று அது கூறியது.

இதனால் இந்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி கிட்டத்தட்ட மூன்று விழுக்காடாக இருக்கும் என்று ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் அக்டோபர் 28ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி இரண்டு விழுக்காட்டிற்கும் மூன்று விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கும் என்று அவை ஏற்கெனவே முன்னுரைத்திருந்தன.

2025ஆம் ஆண்டு பொருளியல் இதே வேகத்தில் வளர்ச்சி அடையக்கூடும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

குறைவான இறக்குமதி விலை, மெதுவான உள்நாட்டு ஊதிய வளர்ச்சி ஆகியவற்றால் 2025ஆம் ஆண்டில் பணவீக்க விகிதம் சராசரியாக 1.5 முதல் 2.5 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஈராண்டுகளுடன் ஒப்புநோக்க இந்த விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைவாகும்.

ஊதிய உயர்வு தணியும் வேளையில் முதலாளிகளும் அதிக லாபம் ஈட்டுவதால் அடுத்துவரும் காலாண்டுகளில் ஆட்சேர்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் கூறியது.

இந்த ஆண்டிறுதிக்குள் ஊழியர் தேவை வலுவடையும் என்று கருதப்படுகிறது. நிதிச் சேவை, தகவல், தொடர்புத் துறைகளில் ஆட்சேர்ப்பு விகிதம் உயர்வாக இருக்கும்.

வளர்ச்சி அடைந்த நாடுகளின் மத்திய வங்கிகள் 2025ல் அவற்றின் வட்டி விகித உயர்வைத் தொடர்ந்து குறைக்கும் என்று நம்பப்படுவதால் சிங்கப்பூரின் நிதித் துறை வளர்ச்சியை அது ஊக்குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சிங்கப்பூர்ப் பொருளியலின் வளர்ச்சியும் பணவீக்க விகிதமும் புவிசார் அரசியல், வர்த்தகப் பதற்றங்களால் பாதிக்கப்படக்கூடும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது. இதனால் உள்ளூரில் ஆட்சேர்ப்பு பாதிக்கப்படலாம். மேலும், உலக அளவில் தொழில்நுட்பத் துறையின் மீட்சி எதிர்த்திசையில் செல்லக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்