பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பொருளியல் அபாயங்கள் சிங்கப்பூருக்கு மென்மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகி வருகின்றன. இது தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் உடனடி நிதி மற்றும் சொத்து இழப்புகளுக்கு அப்பால், விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் வரை நீடிக்கிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி மற்றும் நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இத்தகைய அபாயங்கள் சிங்கப்பூரின் நிதி மற்றும் நிபுணத்துவச் சூழலில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று வியாழக்கிழமையன்று (மார்ச் 12) நடைபெற்ற ‘நீடித்த நிலைத்தன்மை மற்றும் பசுமை நிதி அமைப்பின் நீடித்த நிலைத்தன்மை உச்சநிலை மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசினார்.
“நிலைத்தன்மை விதிமுறைகளைக் கையாளுவதற்கும், வலுவான பருவநிலை தரவு அறிக்கையிடலை உறுதி செய்வதற்கும் பசுமை நிதிக் கட்டமைப்புகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கும் சட்ட நிறுவனங்கள், கணக்காளர்கள் மற்றும் ஆலோசகர்களின் தேவை பெருகி வருகிறது.
“இது போன்ற நிறுவனங்கள், நிலையான மேம்பாடு மற்றும் பருவநிலை அபாய மதிப்பீட்டில் சிறப்பு நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்கான வளர்ச்சி வாய்ப்புகளை இது பிரதிபலிக்கிறது,” என்று அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தனது பருவநிலை இலக்குகளை அடைவதற்கு, இயற்கை மூலதன முதலீடுகளை மதிப்பீடு செய்து நிதி வழங்குவதில் திறன் கொண்ட ஊழியர்கள் மிக முக்கியம் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி கூறினார்.
இயற்கை மூலதனம் என்பது பொருளியல் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இயற்கை வளங்களைக் குறிக்கிறது.
2025ஆம் ஆண்டில் மட்டும், பருவநிலை மாற்றத்தால் தீவிரமடைந்த வெள்ளம் மற்றும் சூறாவளி போன்ற வானிலை நிகழ்வுகளால் ஆசிய-பசிபிக் வட்டாரம் முழுவதும் 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$89.3 பில்லியன்) அதிகமான பொருளியல் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் இந்திராணி தெரிவித்தார்.
சிங்கப்பூர் தனது உணவுத் தேவையில் 90 விழுக்காட்டுக்கும் மேலாக இறக்குமதி செய்வதால், பருவநிலை தொடர்பான இடையூறுகளால் ஏற்படக்கூடிய வெளிப்புற பாதிப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்களால் நாம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“தீவிர வானிலை நிகழ்வுகள் முக்கியமான உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தக்கூடும் மற்றும் துறைமுக செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்குத் தயாராவதற்கான தேசிய முன்னுரிமையை வலியுறுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டை ‘பருவநிலைத் தழுவல் ஆண்டாக’ சிங்கப்பூர் இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.
இதை எதிர்கொள்ள, வெப்பத்தை நிர்வகிப்பதற்கான புதிய அரசு அலுவலகம், மற்றும் வெப்பம் தாங்கும் திறன், வெள்ளத் தடுப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களுக்கு ஆதரவளிக்க $5 மில்லியன் நிதி ஒதுக்கீடு எனப் பல முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

