இன்றைய உலகில் பாதுகாப்பாகத் திகழ்வதற்கு பொருளியல் வெற்றி, நம்பகமான ஆயுதப்படை, வட்டார ஒத்துழைப்பு ஆகியவை மிக முக்கியம் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
விதிமுறைகள் அடிப்படையிலான ஏற்பாடுகளின்கீழ் வர்த்தகம் தொடர முடியும் என்பதை உறுதிசெய்வதற்காக ஆசியான் வட்டாரக் குழுவின் ஒரு பகுதியாகவோ அல்லது பிற நாடுகளுடன் நேரடியாகவோ இதர தரப்பினருடன் உறவுகளை உருவாக்கவும் சிறிய நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 8) நடைபெற்ற நிகழ்ச்சியில், மற்ற நாடுகளின் ஒருதலைபட்ச நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் உலக ஒழுங்குமுறை தொடர்பில் சிறிய நாடுகள் என்ன செய்ய இயலும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“குழப்பத்தை எதிர்கொள்வது: தென்கிழக்காசியாவில் அனைத்துலக ஒழுங்குமுறைகளின் எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்த ஒரு மணி நேர அமர்வில் புவிசார் அரசியல் விவகாரங்கள் குறித்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டன.
இவ்வட்டாரத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பங்கு குறித்த கேள்விகளுக்கும் திரு லீ பதிலளித்தார்.
மேலும், தாம் சிங்கப்பூரின் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்தும் அவர் பேசினார்.
சிங்கப்பூர் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது குறித்த பார்வையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த திரு லீ, சிங்கப்பூர் தனது பொருளியல் வெற்றிகரமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், ஏனெனில், அது ‘வலுவற்றதாக அல்லது பிளவுற்றதாக’ இருந்தால் தேசம் செயல்பட வழிவகை இருக்காது என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ராணுவம் தொடர்பான கண்ணோட்டம் குறித்து பேசிய அவர், சிங்கப்பூர் ஒவ்வொரு ஆண்டும் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 விழுக்காட்டை நீண்ட நெடுங்காலமாகத் தற்காப்புக்காகச் செலவழித்து வருவதாகவும் அவ்வகையில் நம்பகமான ஆயுதப்படைகளை சிங்கப்பூர் உருவாக்கியுள்ளதாகவும் திரு லீ விளக்கினார்.
“நாம் அதைத் தொடர்ந்து செய்வோம். அது யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல. மாறாக, சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு,’’ என்றார் அவர்.

