சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பில் மாற்றமில்லை

2 mins read
9cb4d928-fb32-4df8-abbb-13300a4e2587
இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 2.6 விழுக்காடாகப் பதிவாகும் என்று பொருளியல் நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகளாவிய நிலையில் வர்த்தக நெருக்கடிநிலை அதிகரித்து வருகிறது.

இருப்பினும், சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி தொடர்பாகத் தனியார் துறையைச் சேர்ந்த பொருளியல் நிபுணர்கள் முன்வைத்த முன்னுரைப்பில் மாற்றமில்லை.

இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 2.6 விழுக்காடாகப் பதிவாகும் என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சி அதைவிடக் குறைவாக இருக்கும் என்றும் 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் நிலையில், 3 விழுக்காட்டுக்கு மிக அருகில் பதிவாகும் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்துள்ளது.

சீனாவின் பொருளியல் வளர்ச்சி பலவீனம் அடைந்தாலோ அல்லது பணவீக்கம் மீண்டும் தலைதூக்கினாலோ அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளியல் நிபுணர்கள் அக்கறை தெரிவித்தனர்.

இது பொருளியல் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் நடத்திய ஆக அண்மைய ஆய்வு மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆய்வு அறிக்கையை ஆணையம் புதன்கிழமை (மார்ச் 19) வெளியிட்டது.

2026ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 2.3 விழுக்காடு பதிவாகும் என்று ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்தனர்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பணவீக்கம் தொடர்ந்து குறையும் என்று ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.

2025ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 1.7 விழுக்காடாகக் குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் அது 2.5 விழுக்காடாக இருந்தது.

தனியார் போக்குவரத்து, வசிப்பிடச் செலவுகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளாத மூலதாரப் பணவீக்கம் இவ்வாண்டு 1.5 விழுக்காடாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, 2024ஆம் ஆண்டில் 2.8 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்