தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வியே சமூகத்தைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல்மிக்கது: ஓங் யி காங்

3 mins read
d99293c5-2cb9-42b9-94ac-bc310fb0f3fe
சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங்கிடமிருந்து ‘அனுகுரா செமர்லாங் மெண்டாக்கி’ விருதையும் கல்விச் சாதனை விருதையும் பெறும் தானிஷ் முஷர்ரஃப் உபைதலி. - படம்: யயாசன் மெண்டாக்கி

எவ்விதப் பின்னணியிலிருந்து வரும் சிங்கப்பூரரும் குடும்பம், சமூகம், நாடு எனப் பல நிலைகளிலும் பங்காற்ற வழிவகுப்பது கல்வியே என்று சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் கூறியுள்ளார்.

மலாய்/முஸ்லிம் சுய உதவிக்குழுவான யயாசன் மெண்டாக்கி அதை முன்னெடுத்துவந்துள்ளது என்றார் திரு ஓங்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற வருடாந்திர ‘அனுகுரா மெண்டாக்கி’ விருது விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

அனுகுரா மெண்டாக்கி விருதுகள், கல்வியில் சிறக்கும் மலாய்/முஸ்லிம் மாணவர்களை 1982 முதல் ஆண்டுதோறும் அங்கீகரித்து வருகின்றன. இவ்வாண்டு 529 மாணவர்கள் விருது பெற்றனர். அவர்களில் 119 பேர், முதல் வகுப்பு ஹானர்ஸ் தேர்ச்சி பெற்றதற்காக ‘அனுகுரா செமர்லாங் மெண்டாக்கி’ விருதுகளைப் பெற்றனர். இது, 2024 உடன் ஒப்பிடுகையில் 35 விழுக்காடு அதிகம்.

சிறுவயதுச் சவால்களைத் தகர்த்தெறிந்து சாதனை

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு பட்டப்படிப்பில் முதல் நிலையில் வந்து, ஆக உயரிய தேர்ச்சி பெற்றுள்ளார் தானிஷ் முஷர்ரஃப் உபைதலி.

அதற்காக லீ குவான் யூ தங்கப் பதக்கம் மட்டுமன்றி, ‘கல்விச் சாதனை’, ‘அனுகுரா செமர்லாங் மெண்டாக்கி’ என இரு விருதுகளை அவர் பெற்றார்.

கல்வியில் முதல் நிலையில் வந்தவர்களுக்கு ‘கல்விச் சாதனை’ விருதும், முதல் ரக ஹானர்ஸ் தேர்ச்சிபெற்றவர்களுக்கு ‘அனுகுரா செமர்லாங்க் மெண்டாக்கி’ விருதும் வழங்கப்படுகின்றன.

“நன்றாகப் படித்தால் அனைத்தும் சிறப்பாக நடக்கும் என்று சிறுவயதிலிருந்தே என் பெற்றோர் என்னிடம் கூறி வந்தனர். அதில் எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு.

“நான் தொடக்கப்பள்ளியில் இருந்தபோது என் நண்பர்கள் என்னை ஒதுக்கிவைத்தனர். சிறுவயது, அறியாத வயது. அதனால் அவர்கள்மீது எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை. எனினும், அது என்மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்றார் தானி‌ஷ்.

“ஒருநாள், நான் என் வகுப்பில் மூன்றாம் நிலையில் வந்துள்ளேன் என என் ஆசிரியர் கூறியபோது, நண்பர்கள் பலர் இல்லாவிட்டாலும் என்னால் சிறப்பாகப் படிக்க முடியும் என்பதை உணர்ந்தேன்,” என்றார் அவர்.

தொடக்கப்பள்ளியில் சிறப்பாகச் செயல்பட்டதும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற நாட்டம் அவருக்கு ஏற்பட்டது.

“எனக்கு வகுப்பறையில் அமர்ந்து கற்கப் பிடிக்கும். சிங்கப்பூரில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்கத் தயங்குவதுண்டு. ஆனால் எனக்கோ, என் பெற்றோர் என்னை வளர்த்த விதத்தால் அப்படியொரு தயக்கமே இல்லை. நான் கேட்கும் கேள்விகள் எனக்கு மட்டுமல்ல, மற்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் என ஆசிரியர்களும் வரவேற்றனர்,” என்றார் தானி‌ஷ்.

தொடக்கப்பள்ளியில் இருந்தபோது தானிஷுக்குக் கணிதம் பிடித்ததால், என்யுஎஸ் மேல்நிலைப் பள்ளியிலும் தொடக்கக் கல்லூரியிலும் கணினியியலைத் தேர்வுசெய்தார். டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்விப் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்றதோடு, இந்தியாவில் ஓர் அனைத்துலக மாநாட்டிலும் அறிவியல் கட்டுரைப் படைத்துள்ளார் தானி‌ஷ். தற்போது அவர் ‘சிம்பிலிஃபைநெக்ஸ்ட்’ எனும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

கல்விக்கு அப்பாற்பட்டு, சமூக சேவையிலும் தானி‌ஷ் ஈடுபட்டுள்ளார். என்டியு நலச் சேவைகள் மன்றத்தில் செயற்குழு உறுப்பினராகவும் தொண்டூழியர் இயக்கப் பிரிவு உறுப்பினராகவும் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புகைப்படம் எடுப்பது குறித்த பயிலரங்கு, சிறுவர்களுக்குச் சிற்பங்களை உருவாக்கக் கற்பிக்கும் பயிலரங்கு போன்றவற்றை அவர் நடத்திவந்தார்.

தரவு அறிவியல், கணினியல், ஏஐ போன்ற துறைகளில் மலாய்/முஸ்லிம் சமூகத்தினர் போதிய எண்ணிக்கையில் இல்லையென அவர் கருதுகிறார்.

“மனம் வைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனச் சிறுவர்களிடம் சொல்லவேண்டும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்