கல்விச் சீர்திருத்தம் மட்டும் போதாது, பெற்றோர் மனப்போக்கும் மாறவேண்டும்

கல்விச் சீர்திருத்தம் மட்டும் போதாது, பெற்றோர் மனப்போக்கும் மாறவேண்டும்

ஐபிஎஸ் கருத்தரங்கில் தகவல்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 10:06 pm

4 mins read

சிங்கப்பூரில் பெற்றோரின் கல்வி சார்ந்த எதிர்பார்ப்புகள் கூடிவரும் வேளையில், பிள்ளைகளின் கல்விச்சுமை குடும்பங்களில் தொடர் சவாலாக இருந்து வருவதாகக் கொள்கை ஆய்வுக் கழகம் (ஐபிஎஸ்) நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகளை ஆராயும் வகையில் ஐபிஎஸ் ஏற்பாடு செய்த ‘பெற்றோரும் கல்வியும் 2026’ சிறப்புச் கருத்தரங்கு, என்யுஎஸ்எஸ் கென்ட் ரிட்ஜ் கில்ட் ஹவுசில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நடைபெற்றது.

ஐபிஎஸ் தலைமை ஆய்வு அதிகாரி டாக்டர் மேத்யூ மேத்யூஸ் நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றினார்.

கிட்டத்தட்ட 1,500 சிங்கப்பூர்ப் பெற்றோரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், 84 விழுக்காட்டுப் பெற்றோர் நற்பண்புகளுக்கு முதன்மை முக்கியத்துவம் அளித்தாலும், 88 விழுக்காட்டினர் கல்வி சார்ந்த மன அழுத்தத்தைச் சந்திப்பதாகத் தெரிவித்தார்.

2016ல் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வோடு ஒப்பிடுகையில், குடும்பங்களில் கல்வி தொடர்பான வாக்குவாதங்கள் 43 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், துணைப்பாட வகுப்புகளுக்கான சராசரி மாதச் செலவு $318லிருந்து $677ஆகவும் செறிவூட்டல் வகுப்புகளுக்கான செலவு $125லிருந்து $355ஆகவும் அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

‘பெற்றோரும் கல்வியும் 2026’ ஐபிஎஸ் கருத்தரங்கின் தொடக்க உரையாற்றி, புதிய ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொண்டார் கொள்கை ஆய்வுக் கழகத்தின் தலைமை ஆய்வு அதிகாரி டாக்டர் மேத்யூ மேத்யூஸ்.
‘பெற்றோரும் கல்வியும் 2026’ ஐபிஎஸ் கருத்தரங்கின் தொடக்க உரையாற்றி, புதிய ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொண்டார் கொள்கை ஆய்வுக் கழகத்தின் தலைமை ஆய்வு அதிகாரி டாக்டர் மேத்யூ மேத்யூஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“பெற்றோரிடையே போட்டி மனப்பான்மையும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும் சூழலில், கல்வித்துறையின் அழுத்தங்களை மட்டும் குறைப்பது போதுமானதாக இருக்காது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குழுக் கலந்துரையாடலை ஐபிஎஸ் துணை இயக்குநரும் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியின் முதன்மைப் பேராசிரியருமான ஏரோன் மணியம் வழிநடத்தினார்.

சமூக உளவியல் நிலையத்தின் முதன்மை மருத்துவ உளவியலாளரும் மூத்த உதவி இயக்குநருமான முனைவர் குவா சா ஹான், ‘மம்ஸ்@வர்க் சிங்கப்பூர்’ அமைப்பின் நிறுவனர் ஷெர்-லி டோரி, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக இணைத் துணைவேந்தர் இணைப் பேராசிரியர் இந்தான் அஸுரா மொக்தார், டாக்டர் மேத்யூ மேத்யூஸ் ஆகிய நால்வரும் இதில் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர்.

கல்வியில் கல்விச் சிறப்பும் வாழ்வியல் திறன்களும் என இருவேறு முரண்பட்ட இலக்குகளையும் சமநிலையுடன் நிர்வகிக்க வேண்டிய ‘இரட்டை நிலைகள்’ (polarities) குறித்துப் பேராசிரியர் ஏரோன் பேசினார். இவை ஒரே முடிவின் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய சிக்கல்கள் அல்ல என்றும் காலப்போக்கில் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்பட வேண்டிய சவால்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அளவுக்கு மீறிய கல்விக்கவனம் அல்லது அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆகிய இரண்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர் நேர்மறையான சமநிலையைப் பேண வேண்டும்,” என்று அவர் சுட்டினார்.

குழு கலந்துரையாடலில் பங்கேற்ற (இடமிருந்து) சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இணைத் துணைவேந்தர் இணைப் பேராசிரியர் இந்தான் அஸுரா மொக்தார், ‘மம்ஸ்@வர்க் சிங்கப்பூர்’ அமைப்பின் நிறுவனரான ஷெர்-லி டோரி, சமூக உளவியல் நிலையத்தின் முதன்மை மருத்துவ உளவியலாளரும் மூத்த உதவி இயக்குநருமான முனைவர் குவா சா ஹான், கொள்கை ஆய்வுக் கழகத்தின் தலைமை ஆய்வு அதிகாரி டாக்டர் மேத்யூ மேத்யூஸ் ஆகியோருடன் கலந்துரையாடலை வழிநடத்திய ஐபிஎஸ் துணை இயக்குநரும் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியின் முதன்மைப் பேராசிரியருமான ஏரோன் மணியம்.
குழு கலந்துரையாடலில் பங்கேற்ற (இடமிருந்து) சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இணைத் துணைவேந்தர் இணைப் பேராசிரியர் இந்தான் அஸுரா மொக்தார், ‘மம்ஸ்@வர்க் சிங்கப்பூர்’ அமைப்பின் நிறுவனரான ஷெர்-லி டோரி, சமூக உளவியல் நிலையத்தின் முதன்மை மருத்துவ உளவியலாளரும் மூத்த உதவி இயக்குநருமான முனைவர் குவா சா ஹான், கொள்கை ஆய்வுக் கழகத்தின் தலைமை ஆய்வு அதிகாரி டாக்டர் மேத்யூ மேத்யூஸ் ஆகியோருடன் கலந்துரையாடலை வழிநடத்திய ஐபிஎஸ் துணை இயக்குநரும் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியின் முதன்மைப் பேராசிரியருமான ஏரோன் மணியம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெற்றோர் தங்களது மனநலனில் முதலில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று முனைவர் குவா வலியுறுத்தினார்.

“விமானத்தில் அவசரநிலை ஏற்படும்போது மற்றவர்களுக்கு உதவும் முன் நமக்கு உயிர்வாயுக் கவசத்தை முதலில் அணிவதுபோல, பெற்றோர் தங்கள் மன அழுத்தத்தை முதலில் கையாண்டால் மட்டுமே பிள்ளைகளுக்கு அமைதியான சூழலை உருவாக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

மேலும், “பதற்றம் மாணவர்களின் நரம்பியல் கற்றல் திறனைப் பாதிக்கிறது. மகிழ்ச்சியான சூழலே அவர்களின் நேர்மறை வளர்ச்சியை ஊக்குவிக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப மாற்றங்களும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியும் பெற்றோரிடையே எதிர்கால வேலைவாய்ப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளதாகத் திருவாட்டி டோரி தெரிவித்தார்.

“நிறுவனங்களின் தேவைகள் மாறிவரும் சூழலில் பெற்றோர் தங்களின் கவலைகளைப் பிள்ளைகள் மீது கல்வியழுத்தமாகச் சுமத்துகின்றனர்,” என்று அவர் கூறினார். பிள்ளைகளின் தேர்வு முடிவுகளைப் பெற்றோர் தங்களின் வளர்ப்புக்கான அளவுகோலாக பார்க்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேறும் ‘ஃபெய்லிங் ஃபார்வர்ட்’ (failing forward) அணுகுமுறை பிள்ளைகளுக்கு அவசியம் என்று இணைப் பேராசிரியர் இன்டான் வலியுறுத்தினார்.

“இன்றைய நிறுவனங்கள் வெறும் மதிப்பெண்களை மட்டும் பார்ப்பதில்லை. தொடர்புத் திறன், சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் மனிதநேயப் பண்புகளையே பெரிதும் எதிர்பார்க்கின்றன,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் பள்ளி ஆதரவுக் குழுக்களைப் பயன்படுத்தும் முறையில் மாற்றம் தேவை என்றும் அவர் தெரிவித்தார். “பள்ளி ஆதரவுக் குழுக்களைத் துணைப்பாட வகுப்பு நிலையங்களைப் பரிந்துரைக்கும் தளமாக மாற்றாமல், பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அமைப்பாகப் பெற்றோர் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குறைந்த வருமானக் குடும்பங்கள் பள்ளி அமைப்பையே தங்களின் முதன்மை ஆதரவாக நம்பியிருப்பதாகக் கூறிய டாக்டர் மேத்யூஸ், குடும்பச் சூழல் குறித்தும் பேசினார்.

பிள்ளைகளின் கல்வியை நிர்வகிக்கும் பொறுப்பு இன்னும் பெரும்பாலும் தாய்மார்களிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதில் தந்தையரின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கல்வி முறையில் அரசு கொண்டுவரும் சீர்திருத்தங்கள் மட்டுமே மனஅழுத்தத்தைக் குறைத்துவிடாது என்றும் பெற்றோரின் மனப்போக்கிலும் சமூகத்தின் எதிர்பார்ப்பிலும் மாற்றம் ஏற்படுவதே இதற்குத் தீர்வாகும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பள்ளிக் கல்விகல்வித்துறைஆய்வுகலந்துரையாடல்ஐபிஎஸ்