சாதாரண வாகனங்களுக்கும் மின் வாகனங்களுக்கும் இடையே வேறுபடுத்தப்பட்ட வாகன உரிம எண் பலகைகளின் பயன்பாடு குறித்து உள்துறை அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் ஆராய்ந்து வருவதாக உள்துறைக்கான இரண்டாவது அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
அவசரச் சம்பவங்களின்போது, சாதாரண வாகனத்திற்கும் மின் வாகனத்திற்கும் இடையே வேறுபடுத்தி அறிய இத்தகைய ஏற்பாடு உதவும் என்றும் திரு டோங் கூறினார்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய திரு டோங், மின் வாகனங்கள் தீப்பற்றும்போது அவற்றால் விளையும் அபாயம் மாறுபட்டது என்றும், அதனைக் கையாளக் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தனி அணுகுமுறை தேவை என்றும் கூறினார்.
மின் வாகனங்கள் தீப்பற்றும்போது நெருப்பு மேலும் கடுமையாக இருக்கும் என்பதால், விரிவான பாதுகாப்பு வளையத்தை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவித்த திரு டோங், இந்த வேறுபாடு பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். “மின் வாகனம் தீப்பற்றும்போது சாலையிலுள்ள மற்ற வாகன ஓட்டிகள் விலகிச் செல்ல இந்த ஏற்பாடு உதவலாம்,” என்று அவர் கூறினார்.
ஒட்டுமொத்தத் தீப் பாதுகாப்பு பற்றியும் பேசிய திரு டோங், அனைத்துலகத் தரநிலைகளின்படி சிங்கப்பூரிலுள்ள ஒட்டுமொத்தத் தீச்சம்பவ எண்ணிக்கை நிலையாகவும் உலகத் தரநிலைகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 2,000 தீச்சம்பவங்கள் பதிவானதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

