தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் - இந்தியா வணிக உறவை மேம்படுத்தும் உடன்பாடு கையெழுத்து

2 mins read
8bf7962c-3a4c-404d-8a0c-547e234f65c7
ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று தொழில் சம்மேளன மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திடும் சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனத் தலைமை நிர்வாக அதிகாரி பிங் சூன் கோக் (இடது), யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைஸ் நிறுவனத் தலைவர் பிரசூன் முகர்ஜி (வலது). - படம்: யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைஸ் நிறுவனம்

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தையும் முதலீட்டு உறவுகளையும் மேம்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனம், யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஓர் பங்காளித்துவக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.

இது இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள சிங்கப்பூர் ‘என்டர்பிரைஸ் சென்டர் (SEC) இந்தியா’வை நிறுவுவதற்கு ஆதரவளிக்கும். தொடர்ந்து, புதிய வணிகப் பங்காளித்துவ வாய்ப்புகள், இந்தியாவில் தொழில் செய்ய விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் பல்வேறு ஆதரவுகள் ஆகியவை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துலகமயமாக்கல் செயற்குழு உறுப்பினர்களின் முன்னிலையில் சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனத் தலைமை நிர்வாக அதிகாரி பிங் சூன் கோக், யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைஸ் நிறுவனத் தலைவர் பிரசூன் முகர்ஜி ஆகியோர் இக்குறிப்பில் கையெழுத்திட்டனர்.

பெங்களூரில் அமையவுள்ள நிறுவனம் வரும் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்முயற்சிகளின் ஓர் பகுதியாகத் தொழில்நுட்பம், நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய பங்காளித்துவம் தொடர்பான தகவல்களைத் திரட்ட 2025 அக்டோபர் 27ஆம் தேதி திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இந்தியாவில் தொழிலை விரிவுபடுத்த ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் சேர சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்து நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த அனைத்துலகமயமாக்கல் செயற்குழு உறுப்பினர்களுடன் சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனத் தலைமை நிர்வாக அதிகாரி பிங் சூன் கோக் (வலமிருந்து இரண்டாவது), யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைஸ் நிறுவனத் தலைவர் பிரசூன் முகர்ஜி (இடமிருந்து நான்காவது).  
புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்து நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த அனைத்துலகமயமாக்கல் செயற்குழு உறுப்பினர்களுடன் சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனத் தலைமை நிர்வாக அதிகாரி பிங் சூன் கோக் (வலமிருந்து இரண்டாவது), யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைஸ் நிறுவனத் தலைவர் பிரசூன் முகர்ஜி (இடமிருந்து நான்காவது).   - படம்: யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைஸ் நிறுவனம்

இதற்கிடையே, ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று யுனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைஸ் தலைவர் பிரசூன் முகர்ஜி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

அதில், தென்கிழக்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலை குறித்தும், அமெரிக்கா இறக்குமதி வரி விதித்துள்ளபோதும் இந்தியப் பொருளியல் வலுவாக இருப்பதைப் பற்றியும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் தற்சார்பை மேம்படுத்துவது, உற்பத்தித் துறை, இளைய ஊழியரணி ஆகியவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்துவது, மேம்படுத்துவது குறித்துப் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்