கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குவது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற செயல்களுக்காக நன்கொடை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க உதவ புதிய குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
ஆலோசனை வழங்குவது, கிடைக்கும் நன்கொடையின் பின்னணியை அறிவதற்கான சோதனைகள், போன்ற சேவைகளை அக்குழு நன்கொடை அமைப்புகளுக்கு வழங்கும். அறநிறுவனர் ஆணையர் அலுவலகமும் (Office of the Commissioner of Charities) நன்கொடை மன்றமும் (Charity Council) இணைந்து மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் புதிய குழு அமைக்கப்பட்டதும் அடங்கும்.
சுற்றுச்சூழல், சமுதாய, ஆளுமை (ESG) நடைமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கும் நோக்கில் இதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பந்தப்பட்டோரிடமிருந்து கூடுதல் ஆதரவு பெறுவது, சிறிய நன்கொடை அமைப்புகளில் எழக்கூடிய கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வுகாணும் முயற்சிகளில் கைகொடுப்பது ஆகியவை அவற்றின் இலக்குகளாகும்.
கள்ளப்பணத்தை நல்லப்பணமாக்குவது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட நன்கொடை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கப் புதிய குழு, கிடைக்கும் நன்கொடையின் பின்னணியை அறிய சலுகை விலையில் சோதனைச் சேவைகளை வழங்கும்.
சிங்கப்பூர் கணக்குத் தணிக்கையாளர் கழகமும் (Institute of Singapore Chartered Accountants) அறநிறுவனர் ஆணையர் அலுவலகமும் இணைந்து புதிய குழுவை அமைக்கும். நன்கொடை அளிக்கும் தனிநபர்கள், குழுக்களின் பெயர்கள் தேடப்படுவோர் பட்டியல்கள் அல்லது எதிர்மறையான செய்திகளில் இடம்பெற்றுள்ளனவா போன்ற தகவல்களை அறிய சோதனைச் சேவைகள் உதவும்.
சிங்கப்பூர் கணக்குத் தணிக்கையாளர் கழகத்தில் உள்ள உறுப்பினர்களும் நிறுவனங்களும் தேவைப்படும்போது சோதனைகளை மேற்கொள்ளும். தங்களின் செயல்முறைகளில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய அம்சங்கள், நன்கொடை வழங்குவோரிடம் சந்தேகம் எழுப்பக்கூடிய அம்சங்கள் போன்றவற்றை நன்கொடை அமைப்புகள் அடையாளம் காணவும் புதிய குழு ஆலோசனை சேவைகளை வழங்கும்.
பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தொடர்பிலான புரிந்துணர்வு பல்வேறு நன்கொடை அமைப்புகளிடையே மாறுபட்டுள்ளது; அதுகுறித்து ஆலோசனையும் ஆதரவும் வழங்குமாறு பல நன்கொடை அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளதாக கலாசார, சமூக, இளையர் அமைச்சு புதன்கிழமையன்று (அக்டோபர் 2) வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிட்டது.