எரிபொருள் விலை அதிகரித்து வருவதால் அந்தச் சுமையிலிருந்து ஓட்டுநர்களையும் மோட்டார் சைக்கிளோட்டிககளையும் பாதுகாக்க தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), வாடகை வாகனச் சேவையை வழங்கும் தளங்களுடனும் டாக்சி நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு வட்டாரத்திலிருந்து எண்ணெய் விநியோகிக்கப்படுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. போர் நான்காவது வாரமாகத் தொடர்கிறது.
“இப்பிரச்சினைக்கான தீர்வில் வாடகை வாகனச் சேவைத் தளங்கள், டாக்சி நிறுவனங்கள் ஆகியவையும் சம்பந்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த நமது இணையவழி ஊழியர்ச் சங்கங்கள் கடினமாக உழைத்திருக்கின்றன,” என்று என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் இயோ வான் லிங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“விலை அதிகரிப்பால் ஏற்படும் கட்டணச் சுமை நமது ஓட்டுநர்களும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் மட்டும் சுமக்க வேண்டியதாய் இருக்கக்கூடாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்டியுசியுடன் இணைந்து செயல்படும் இணையவழிச் சேவைச் சங்கங்களான தேசிய விநியோக ஓட்டுநர் ஆதரவுச் சங்கம் (என்டிசிஏ), தேசியத் தனியார் வாடகை வாகனச் சங்கம் (என்பிஎச்விஏ), தேசிய டாக்சி சங்கம் (என்டிஏ) ஆகியவை எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்துச் செவ்வாய்க்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து திருவாட்டி இயோ இவ்வாறு கூறியுள்ளார்.
டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், விநியோக ஓட்டுநர்கள் ஆகியோரின் வாழ்வாதார நிலைமை சமாளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதில் அவர்களின் நிறுவனங்களுக்கும் பங்கு உள்ளது என்றும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி இயோ சொன்னார்.
இப்போதைக்கு கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் அதன் வாகனங்களுக்கான பெட்ரோல் விலையைச் சந்தை விலையைவிட ஏறத்தாழ 30 விழுக்காடு குறைவாக வைத்துள்ளது. ஓட்டுநர்களுக்கு உதவும் நோக்கில் ஒவ்வொரு டாக்சிச் சேவை முன்பதிவுக்கும் தற்காலிகமாக 50லிருந்து 80 காசு கூடுதல் கட்டணம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளையும் கம்ஃபர்ட்டெல்குரோ எடுக்கிறது.
டிரான்ஸ்-கேப், ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர், பிரைம், கிராப்கேப் போன்ற டாக்சி நிறுவனங்களும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், தகுந்த ஆதரவு நடவடிக்கைகளை எடுக்குமாறு தனியார் வாடகை வாகனச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை என்பிஎச்பிவிஏ கேட்டுக்கொண்டுள்ளது.

