கல்லீரல் செயலிழப்பால் உருவாகும் உருவாகும் நச்சு வகைகளிலிருந்து (toxins) மூளையைப் பாதுகாக்க உடலின் செரிமானக் குழாயில் ‘குட் பேக்டீரியா’ என்றழைக்கப்படும் நல்லவகை கிருமிகளின் வடிவங்களை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் (programmed bacteria).
அவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள கிருமிகள், நச்சு வகைகள் மூளைக்குப் போகாமல் தடுப்பதோடு அவை சேருவதையும் குறைக்கின்றன. இதன் மூலம், கல்லீரல் செயலிழப்பால் உருவாகும் அமோனியா போன்ற நச்சுகளின் அளவை இவை 10 மடங்கு வரை குறைக்கின்றன. இது ஆரோக்கியமான நிலையில் மூளையில் இருக்கும் அம்மோனியா அளவிற்கு இணையானது.
எட்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஆய்வின் முடிவுகள் இம்மாதம் 24ஆம் தேதி செல் (Cell) எனப்படும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
செல், உயிர் அறிவியல் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் கவனம் செலுத்தும் சஞ்சிகையாகும்.
கல்லீரல் செயலிழக்கும்போது அமோனியாவின் அளவு அதிகரித்து அது மூளைக்குப் போகும். அந்த அமோனியா, ரத்தத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டியது.
அமோனியா, மூளைக்குப் போகும்போது ‘ஹெப்பேட்டிக் என்சிஃபலோப்பத்தி’ (எச்இ) எனும் நிலை ஏற்படும். அது, கல்லீரல் நோயினால் ஏற்படும் மூளை தொடர்பான பிரச்சினையாகும்.
அதன் காரணமாக மனப்பதற்றம், குழப்பம், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்குப் பாதிக்கப்படுவோர் ஆளாகலாம். உடல்நிலை மோசமானால் கோமா நிலை அல்லது மரணத்தில்கூட முடியலாம்.
எச்இ, பல வேளைகளில் ‘லிவர் சிரோசிஸ்’ எனப்படும் கல்லீரல் பிரச்சினையின் இறுதிக் கட்டமாகும்.

