இந்தப் புதிய ஆண்டிலும் ஆசிரியர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் முயற்சிகள் தொடரும். கல்வி அமைச்சு அதற்கு முன்னுரிமை கொடுக்கும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் கடமைகள், வேலை நடைமுறைகளை கல்வி அமைச்சு தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.
கல்வியாளர்களை வரவேற்கும் விதமாக இன்று ( ஜனவரி 5) காணொளி ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.
அதில், கற்பித்தல் தொழில், ஆசிரியர்களுக்கான பிற ஆதரவு நடவடிக்கைகளை மறுவடிவமைத்து வரும் கல்வி அமைச்சின் பணிக்குழுப் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“நான், உங்களில் சிலருடன் உரையாடியதில் கற்பித்தல் தொழில் எவ்வளவு சவாலாக, சிக்கலாக மாறியுள்ளது என்பதை உங்களுடைய வெளிப்படையான கருத்துகளிலிருந்து தெரிந்துகொண்டேன்,” என்று மூன்று நிமிட காணொளியில் அமைச்சர் கூறியிருந்தார்.
“ஆனால், ஆசிரியர் வேலையின் நோக்கத்தை அறிந்து அத்தகைய சிரமமான பணிகளிலிருந்து நீங்கள் பின்வாங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
“ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள், எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை மறுபரிசீலனை செய்வதில் நாங்கள் முன்னேறி வருகிறோம்,” என்ற திரு டெஸ்மண்ட் லீ, முக்கிய முன்னுரிமைகளை அடையாளம் காண்பதிலும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி, நிர்வாக செயல்முறைகளை எளிதாக்குவதிலும் பள்ளித் தலைவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
கொள்முதல் நடைமுறைகளை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது குறித்தும் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல் மற்றும் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த முடியும்.
கொள்முதல் என்பது கற்பித்தலுக்கான பொருள்களை வாங்குவது, அதற்கான நிறுவனங்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட வேலைகள் மற்றும் ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகளை உள்ளடக்கியது.
கடந்த சில ஆண்டுகளாக வேலை, தனிப்பட்ட தேவைகளைக் கருத்தில்கொண்டு ஆசிரியர்களுக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
பாடங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வதும் இவற்றில் அடங்கும்.
முக்கியமில்லாத, அவசரமில்லாத சமயங்களில் பள்ளிக்குப் பிந்தைய நேரங்களில் பெற்றோரும் ஊழியரும் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் வழிகாட்டுதல்களை அமைச்சு புதுப்பித்துள்ளது.
தற்போது, ஆசிரியர்களின் பலம், விருப்பங்களை கருத்தில் கொண்டு நியாயமான முறையில் எவ்வாறு வேலைகளை ஒதுக்குவது என்பது குறித்து பள்ளித் தலைவர்களுக்கு வழிகாட்டப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்கள் ஆறு முதல் ஏழு வாரங்கள் உத்தரவாதமுள்ள விடுமுறையைப் பெறுகிறார்கள். இது மேலும் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

