கணக்கியல் துறையை வலுப்படுத்தும் முயற்சிகள் பலனளித்துள்ளன: அமைச்சர் இந்திராணி

2 mins read
d241e554-124a-4e47-a691-43e6a7155209
கணக்கியல் ஊழியரணி மறுஆய்வுக் குழுவின் அறிக்கை, பட்டதாரிகளையும் பணியிடை மாற்றத்தை விரும்பும் ஊழியர்களையும் இத்துறை ஈர்ப்பதற்குரிய உத்திகளைப் பரிந்துரைத்தது. - கோப்புப் படம்: பிசினெஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கணக்கியல் துறையை மேம்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தும் முயற்சி பலனளிப்பதாகப் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கூறியுள்ளார்.

இதைத் தக்கவைத்துக்கொண்டு, மேலும் சில பரிந்துரைகள் தொடர்பில் செயலாற்ற, சிங்கப்பூரின் தேசிய கணக்கியல் அமைப்பும், கட்டுப்பாட்டுப் பிரிவும் இணைந்து ஒரு புதிய குழுவை அமைத்திருப்பதாக வியாழக்கிழமை (நவம்பர் 14) அவர் குறிப்பிட்டார்.

துறைசார்ந்த 1,000 வல்லுநர்கள் பங்கேற்ற சிங்கப்பூர் கணக்காய்வாளர்கள் கழகத்தின் (Isca) வருடாந்தரக் கருத்தரங்கில் அமைச்சர் உரையாற்றினார். சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் அக்கருத்தரங்கு நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் டியோ செர் லக், கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (ACRA) தலைமை நிர்வாகி சியா-டெர்ன் ஹுவே மின் இருவரும் புதிய குழுவிற்குத் தலைமை தாங்குவர். பல்வேறு கணக்கியல் நிறுவனங்கள், கல்வி நிலையங்களின் பிரதிநிதிகளும் அதில் இடம்பெற்றிருப்பர்.

கணக்கியல் துறை, பட்டதாரிகளையும் பணியிடை மாற்றத்தை விரும்பும் ஊழியர்களையும் மேலும் ஈர்ப்பதற்குரிய உத்திகள் கணக்கியல் ஊழியரணி மறுஆய்வுக் குழுவின் (AWRC) அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டன.

அறிக்கை வெளியான பிறகு, தொடக்க ஊதியத்தை உயர்த்துதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதன் விளைவாக, உரிமம் பெற்ற சிங்கப்பூர் கணக்காய்வாளர் தகுதித் திட்டத்தில் சேர்வோர் எண்ணிக்கை இருமடங்கானதாக அமைச்சர் இந்திராணி கூறினார்.

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வரை, இத்திட்டத்தில் 1,967 பேர் சேர்ந்தனர். ஒப்புநோக்க, சென்ற ஆண்டு (2023) முழுவதும் இதில் சேர்ந்தோர் எண்ணிக்கை 927 ஆகும்.

உரிமம் பெற்ற சிங்கப்பூர் கணக்காய்வாளர் (CA Singapore) ஆவதற்கான ஒரே வழி இத்திட்டத்தில் சேர்வது மட்டுமே.

அமைச்சர் இந்திராணி கழகத்தின் அண்மைய சம்பள வழிகாட்டிக் கையேட்டையும் வெளியிட்டார். மாணவர்கள் கணக்கியலை வாழ்க்கைத் தொழிலாகக் கருதுவதை ஊக்குவிப்பது இதன் நோக்கம்.

கருவூல மேலாளர்கள், வரிக் கணக்காய்வாளர், கணக்குத் தணிக்கையாளர் போன்ற வேலைகளுக்கு மாதச் சம்பளம் 4,500 வெள்ளி வழங்கப்படுவதாக அந்தக் கையேடு கூறுகிறது. மனிதவள அமைச்சு 2022ஆம் ஆண்டு நடத்திய கருத்தாய்வின் அடிப்படையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்