வேக வரம்பை மீறிய எட்டு கனரக வாகனவோட்டிகள்மீது குற்றஞ்சாட்டப்படும்

வேக வரம்பை மீறிய எட்டு கனரக வாகனவோட்டிகள்மீது குற்றஞ்சாட்டப்படும்

2 mins read
5a80c88e-33ce-4959-a951-0f64c872d256
துவாஸ் நோக்கிச்செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மேம்பாலம் ஒன்றில் நின்றபடி, லேசர் கருவியைக் கொண்டு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி கனரக வாகனங்களின் வேகத்தைச் சோதித்தார். - கோப்புப் படம்: சாவ்பாவ்

சாலைகளில் வேக வரம்பை மீறியதாகக் கூறப்படும் எட்டு கனரக வாகனவோட்டிகள்மீது செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். அவர்கள் ஓட்டிய வாகனங்கள் எவற்றிலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்கவில்லை.

அந்த எண்மரில் அறுவர் பேருந்து ஓட்டுநர்கள், ஒருவர் சிமெண்ட் கலவை வாகன ஓட்டுநர், எஞ்சியவர் ‘பிரைம் மூவர்’ எனப்படும் கனரக இழுவை வாகன ஓட்டுநர்.

25 முதல் 51 வயதிற்குட்பட்ட அந்த ஓட்டுநர்கள், 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இக்குற்றங்களை இழைத்ததாகக் காவல்துறை திங்கட்கிழமை தெரிவித்தது. சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் அவர்கள்மீது குற்றம் சுமத்தப்படும்.

“நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வேகமாகச் செல்லும் வாகனவோட்டிகளை, குறிப்பாக, கனரக வாகனவோட்டிகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், இத்தகைய பெரிய வாகனங்கள் விபத்துக்குள்ளானால் அவை கடுமையான உயிர்ச்சேதங்களை விளைவிக்கக்கூடும்,” என்று போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.

குற்றங்களில் மூன்று குற்றங்கள் 2025ல் புரியப்பட்டன. அப்போது அந்த ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மணிக்கு 60 கிலோமீட்டர் வேக வரம்பை மீறினர். 2026 ஜனவரியில் இரு குற்றங்களும் பிப்ரவரியில் மூன்று குற்றங்களும் இழைக்கப்பட்டன.

லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவதற்கான முதல் காலக்கெடு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்தக் காலக்கெடு, 2018க்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட, 5,001 கிலோகிராம் முதல் 12,000 கிலோகிராம் வரை அதிகபட்ச எடையைக் கொண்ட லாரிகளுக்குப் பொருந்தும்.

ஜூலை 1ஆம் தேதி அடுத்தகட்டக் காலக்கெடுவிற்குள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த வேண்டிய லாரிகளில், மே 1ஆம் தேதி நிலவரப்படி 7.4 விழுக்காட்டு வாகனங்களில் அக்கருவிகள் பொருத்தப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இக்காலக்கெடு, 2018 ஜனவரி 1க்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட, 3,501 கிலோகிராம் முதல் 5,000 கிலோகிராம் வரை அதிகபட்ச எடையைக் கொண்ட லாரிகளுக்குப் பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்