சமூக நோக்கங்களுக்கு ஆதரவளிப்பதைக் கடமையாகக் கருதும் நிறுவனங்கள்

சமூக நோக்கங்களுக்கு ஆதரவளிப்பதைக் கடமையாகக் கருதும் நிறுவனங்கள்

3 mins read
59afac97-a2ac-4147-be07-ad34567d0d8f
முதலாவது தேசிய நிறுவன நோக்கமும் தாக்கமும் ஆய்வு முடிவுகளைக் குறித்துப் பேசிய அமைப்பின் அறிவுத்திறன், நுண்ணறிவுப் (Knowledge & Insights) பிரிவின் துணை இயக்குநர் மா சிரூய். - படம்: தேசியத் தொண்டூழிய, கொடையுணர்வு அமைப்பு

சிங்கப்பூரில் பத்தில் எட்டு நிறுவனங்கள், பரந்துபட்ட சமூக நோக்கங்களுக்கு ஆதரவளிப்பதைத் தங்கள் கடமையாகக் கருதுகின்றன என்பது ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

நிறுவனங்கள் தன்னார்வத் தொண்டு, நன்கொடை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறியது. கடந்த 2021ஆம் ஆண்டு 50 விழுக்காடாக இருந்த சராசரி நிறுவன ஊழியர்களின் தொண்டூழிய ஈடுபாடு, தற்போது 70 விழுக்காடாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சராசரி நன்கொடையின் மதிப்பும் பத்து மடங்கு அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்தது.

ஆனால், சமூகங்களை மேம்படுத்துவதற்கான தொண்டூழிய, நன்கொடை நடவடிக்கைகளில் ஆகக் குறைவாக 30 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கின்றன.

தேசியத் தொண்டூழிய, கொடையுணர்வு அமைப்பு, 699 சிறிய நடுத்தர வர்த்தகங்கள், 401 பெருநிறுவனங்கள் என 1,100 நிறுவனங்களிடம் முதலாவது தேசிய நிறுவன நோக்கமும் தாக்கமும் ஆய்வு (National Corporate Purpose & Impact Study 2025) முடிவில் இவை தெரிய வந்தன.

வணிக நடைமுறைகள், பணியிடக் கொள்கைகள், நிர்வாகக் கட்டமைப்புகள், சமூக முன்னெடுப்புகள் ஆகியவற்றின்மூலம் சமூகத்திற்கான தங்களது கடப்பாட்டை நிறுவனங்கள் எவ்வாறு உறுதிசெய்கின்றன என்பதை அறியும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அது, தேசிய நிறுவன நோக்கக் கட்டமைப்பின் அடிப்படையில் மக்கள், சமூகம், நிர்வாகம், சுற்றுச்சூழல், பொருளியல் ஆகிய தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஐந்து பிரிவுகளிலும் நிறுவனங்களின் பங்களிப்பை ஆராய்ந்தது.

ஆய்வு முடிவுகள்

யூ தோங் சென் ஸ்திரீட்டில் உள்ள தேசியத் தொண்டூழிய, கொடையுணர்வு மையத்தில் வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 6) நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சமூக இலக்குகளுக்கு ஆதரவளிப்பதைத் தங்கள் கடமையாகக் கருதும் 79 விழுக்காடு நிறுவனங்கள் ஐந்து பிரிவுகளில் குறைந்தது ஒரு பிரிவிலேனும் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. ஏறத்தாழ 21 விழுக்காடு நிறுவனங்கள் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஊழியர் நல்வாழ்வு, தொழில்முறை மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய சூழலை ஆதரிக்கும் முயற்சிகள் ஆகியவற்றைக் குறிக்கும் ‘மக்கள்’ பிரிவில் 94 விழுக்காடு நிறுவனங்கள் ஈடுபாடு கொண்டுள்ளதாக ஆய்வு சுட்டியது.

இந்த நிறுவன நோக்க முன்னெடுப்புகளுக்கு ஆதரவான தலைமைத்துவம் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்றும் ஆய்வு சுட்டியது.

நிறுவனங்களின் நீண்டகாலப் பங்கேற்புகளை உரிய அங்கீகாரம்தான் ஊக்குவிக்கும் என்று அமைப்பு குறிப்பிட்டது.

மேலும், “சமூக மேம்பாட்டுக்காகப் பங்களிக்க நிறுவனங்களுடன் இன்னும் அதிகமாகப் பணியாற்ற வேண்டியுள்ளதை இந்த ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது,” என்றார் நிறுவன, தொழில்துறைப் பங்காளித்துவப் பிரிவின் இயக்குநர் லின் சுஃபெய்.

நிறுவனப் பங்களிப்பை வலுவாக்கும் முயற்சிகள்

நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து கண்டறிந்த இந்த ஆய்வின் முடிவில், அப்பங்களிப்புகளை மேலும் வலுப்படுத்தவும், அர்ப்பணிப்பை வளர்க்கவும் சில உத்திகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் தொண்டூழிய, நன்கொடை நடவடிக்கைகளை தேசிய விளக்கக் குறிப்புகளை (National Narratives) மையமாகக் கொண்டு அமைத்தல், எளிதாக அணுகக்கூடிய தொண்டூழிய வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பரிந்துரைகளை அமைப்பு முன்மொழிந்துள்ளது.

அவற்றில் சில நிறுவனங்களின் பங்கேற்பு குறைவாக உள்ளதற்கு தலைமைத்துவத்தில் உள்ளோரின் ஈடுபாட்டுக் குறைவு, குறைவான ஊழியர்கள், பொருளியல் சிக்கல், அறநிறுவனங்களை எவ்வாறு அணுகுவது என்பதை அறியாமை ஆகியவை காரணமென்றும் கண்டறியப்பட்டது.

அவற்றைக் களையும் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் ஆய்வு பரிந்துரைத்தது. அதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லின் சுஃபெய் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்