கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எல் நினோ பருவநிலை நிகழ்வின் தாக்கத்தால் சிங்கப்பூர் புகைமூட்டம் நிறைந்த, வறண்ட வானிலையை எதிர்கொண்டிருக்கலாம்; ஆனால், ஆண்டிறுதியில் சிங்கப்பூரைப் பொறுத்தவரை குளிர்காலமாகப் பார்க்கப்படும் காலத்தில் எல் நினோவால் பாதிப்பிருக்க அதிக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் போல் இவ்வாண்டும் டிசம்பர் மாதம் நீண்டநாள்கள் மழை பெய்து அதிக காற்று வீசி வெப்பநிலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வல்லுநர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் வானிலைச் சேவை (எம்எஸ்எஸ்), “எல் நினோ சூழலில் சுமத்திரா, கலிமந்தான் உட்பட சிங்கப்பூரைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் சராசரிக்குக் கிட்டத்தட்ட நிகரான அல்லது சராசரிக்கு மேலான அளவு மழை பெய்வதுண்டு,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
வரலாறு காணாத எல் நினோ பாதிப்பு
தென்கிழக்காசியாவில், உலகின் நடுக்கோடான இக்குவேட்டருக்கு அருகில் உள்ள பகுதிகளில் எல் நினோவால் என்றையும்விட அதிக வெப்பமான, வறண்ட வானிலை ஏற்படும். இவ்வாண்டு நடுப்பகுதியில் காணப்பட்ட மோசமான எல் நினோ நிகழ்வுக்கு ‘கோட்ஸில்லா’ எல் நினோ என்று பெயரிடப்பட்டுள்ளது. எல் நினோ முன்பு இருந்ததைவிட மோசமாக இருந்தது அதற்குக் காரணம்.
இவ்வாண்டு காணப்பட்ட எல் நினோ, இதுவரை காணப்பட்டதில் ஆக அதிக வீரியம் கொண்ட அல்லது ஆக அதிக வீரியம் கொண்டவற்றில் ஒன்றாக இருக்கும் என்று எம்எஸ்எஸ் கூறியிருந்தது.
இவ்வாண்டு எல் நினோ காரணமாக இந்தோனீசியாவில் காட்டுத்தீயும் விவசாய நிலங்களில் எரிந்த தீயும் மோசமடைந்ததால் செப்டம்பரிலிருந்து அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையைத் தொட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு இவ்வாண்டு புகைமூட்டம் இவ்வட்டாரத்தைப் பாதித்தது.
சிங்கப்பூரில் வடகிழக்குப் பருவக் காற்று வீசும் காலத்தில் பெய்யும் மழையை எல் நினோ அதிகம் பாதிக்காது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) நகர்ப்புறப் பருவநிலைக் கல்விப் பேராசிரியர் மத்தாயஸ் ரோத்.
எனினும், வரும் பிர்வரி, மார்ச் மாதங்களில் எல் நினோவின் தாக்கம் மறுபடியும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
என்யுஎசின் பூமிச் சுற்றுச்சூழல் அறிவியல் கெளரவ துணைப் பேராசிரியர் கோ தியே யோங், எல் நினோவால் வறண்ட வானிலை கூடுதல் வீரியத்துடன் இருக்கக்கூடும் என்றும் அதன் காரணமாக சிங்கப்பூரில் மழைப் பொழிவு குறைவாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
