ஜூரோங் வட்டாரத்தில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்த வயதான தம்பதி ஒன்றாக மாண்டு கிடந்தனர்.
இச்சம்பவம் லேக்சைட் பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகே இருக்கும் காங் சிங் ரோட்டில் உள்ள புளோக் 338D-ல் நேர்ந்தது. அந்த புளோக்கில் வசிக்கும் பலர் மூத்த குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை வீட்டார் ஒருவரின் தகவல் கிடைத்த பிறகு டிசம்பர் 15ஆம் தேதியன்று 18வது தளத்தில் இருந்த வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியரின் அழுகிய நிலையில் இருந்த உடல்களைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவ்விருவரின் உயிரிழப்பு இயற்கை மரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்தோர் தங்களின் வீட்டில் தனியாக இறப்பது குறித்த தகவல்கள் இதற்கு முன்பு வெளிவந்திருக்கின்றன. ஆனால், காங் சிங் ரோட்டில் நேர்ந்த இச்சம்பவம் அடிக்கடி கேள்விப்படாத ஒன்று என்றார் இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தும் ரகுமான் ரஸாலி.
அவரின் டிடிகியூ சர்விசஸ் (DDQ Services) நிறுவனம், அச்சேவைக்கென நகர மன்றங்கள் பணியில் ஈடுபடுத்தும் மூன்று நிறுவனங்களில் ஒன்று.
“இப்பணியில் 10 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள நான் இதுவரை இத்தகைய ஓரிரு சம்பவங்களைத்தான் எதிர்கொண்டிருக்கிறேன்,” என்று திரு ரகுமான் சொன்னார்.
மாண்ட தம்பதி திரு லிம் எங் கியோங், 71, திருவாட்டி மேரி ஓங், 67, என்று அந்த புளோக்கில் வசிக்கும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
வீட்டில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு கணக்கிடுவதில்லை. அதேவேளை, யாரும் பொறுப்பேற்காத 100க்கும் குறைவான உடல்களை சுகாதார அறிவியல் ஆணையம் ஆண்டுதோறும் கையாள்கிறது.
தொடர்புடைய செய்திகள்
டிடிகியூ சர்விசசைப் போன்ற மற்றொரு நிறுவனமான ஒன் ஹார்ட் கிளீனிங், அச்சேவையை வழங்கத் தங்களுக்கு வரும் அழைப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.
சென்ற ஆண்டு தனியாக மாண்ட 270 சம்பவங்களைத் தாங்கள் கையாண்டதாக செங் ஹோங் நல சேவைச் சங்கத்தின் (CHWSS) தலைவர் கெனி சிங் கூறினார்.இது, 2023ஆம் ஆண்டு பதிவான 190ஐவிட அந்த எண்ணிக்கை அதிகமாகும்.
2022ல் 65 வயது அல்லது அதையும் தாண்டிய 79,000 குடியிருப்பாளர்கள் தனியாக வாழ்ந்ததாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒரு குடியிருப்பாளர் 65 வயது அல்லது அதையும் தாண்டியிருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால், தனியாக வாழ்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் மேரா, அங் மோ கியோ, ஹவ்காங், தோ பாயோ போன்ற பழைய குடியிருப்பு வட்டாரங்களில் மூத்தோர் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.

