சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மூத்தவர் ஒருவர், பெண்கள் நால்வரை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் அச்சம்பவங்கள் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. பாலசுப்ரமணியன் ரமேஷ் எனும் அந்த 73 மூன்று வயது சந்தேக நபர், இம்மாதம் 18ஆம் தேதி அதிகாலை 3.15 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் விமானத்தில் பெண்களை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமையன்று (நவம்பர் 25) மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் அவர் மீது மானபங்கம் தொடர்பிலான ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்கள் விமானத்தில் பயணம் செய்தவர்களா அல்லது அதன் ஊழியர்களா என்பது நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை. அவர்களின் அடையாளங்களை வெளியிட அனுமதி இல்லை.
வரும் டிசம்பர் மாதம் 13ஆம் தேதியன்று பாலசுப்ரமணியன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஒப்பிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மானபங்கக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மூவாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதம் அல்லது பிரம்படி அல்லது மூன்றில் ஒன்றுக்கு மேலான தண்டனைகள் விதிக்கப்படலாம்.
பாலசுப்ரணியன் 50 வயதைத் தாண்டிவிட்டதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

