கட்டுமான நிறுவன இயக்குநருடன் சேர்ந்து, பீஷானில் உள்ள சீனர்களுக்கான அஸ்தி காப்பகத்திடம் $1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை ஏமாற்றியதாக அவ்விடத்தின் பராமரிப்பு அதிகாரிமீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குவோங் வாய் சியு பெக் சான் என்ற அந்த அஸ்தி காப்பகத்தில் பணிபுரியும் சிங் வாய் லெங் என்ற 81 வயதுஆடவர்மீதும் அழகப்பன் முத்து என்ற கேகேவி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன இயக்குநர்மீதும் தலா ஒன்பது மோசடிக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) சுமத்தப்பட்டன.
கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் இருவரும் கூட்டு சேர்ந்து நினைவகத்தின் தலைவரை பலமுறை ஏமாற்றியுள்ளனர். அதன்படி, கேகேவி கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட குத்தகைகள் ஏஷியாபில்ட் என்டர்பிரைஸ் என்ற சிங்குக்குச் சொந்தமான மற்றொரு நிறுவனத்துக்கு துணைக் குத்தகைகளாக மாற்றப்பட்டன. கட்டுமானம், கூரைகளில் நீர்புகாமல் பாதுகாக்கும் பணிகள் போன்றவற்றை சிங்கின் நிறுவனம் செய்து வந்தது.
அனைத்துக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இருவரும் வாதிட விருப்பம் தெரிவித்துள்ளதால் வழக்குக்கு முந்தைய விசாரணை மே 21ஆம் தேதி நடத்தப்படும்.
குற்றங்கள் புரியப்பட்டபோது, ஏஷியாபில்ட் என்டர்பிரைஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் இயக்குநருமாக சிங் இருந்துள்ளார் என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
ஏப்ரல் 2023ஆம் ஆண்டு தொடங்கி, அதே ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் அவர்களுக்கிடையே இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறைத்துள்ளனர் எனவும் சிபிஐபி தெரிவித்தது. அதன்படி, கேகேவி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் அனைத்து குத்தகைகளும் ஏஷியாபில்ட் என்டர்பிரைஸ் நிறுவனத்துக்கு மாற்றிவிடப்பட்டன.
சுவர் புதுப்பிப்பு, சாயம் பூசுதல், சுத்தம் செய்தல், மறுசீரமைப்பு போன்ற பலவகைப் பணிகளுக்கான ஒப்பந்த அழைப்புகள் (டென்டர்) பொதுவெளியில் விடப்பட்டும் அவற்றைக் கேகேவி நிறுவனத்துக்குப் பெற்றுத் தர சிங் உதவியுள்ளார். அவை பிறகு ஏஷியாபில்ட் நிறுவனத்துக்கு மாற்றிவிடப்பட்டன என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இருவரின் கூட்டு மோசடி, நினைவகத்தின் தலைவரை $1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகைக்கான பராமரிப்புப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கவைத்துவிட்டது. ஏஷியாபில்ட் நிறுவனத்தில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி சிங் விலகிவிட்டார் என்று வர்த்தகத் தரவுகள் காட்டுகின்றன.

