தெலுக் பிளாங்கா கிரசெண்ட் வட்டாரத்தில் உள்ள தமது அடுக்குமாடி வீட்டில் 65 வயது முதியவர் ஒருவர் மாண்டு கிடந்தார்.
அவர் வேலைக்கு வராததைக் கவனித்த ஒருவர் (மாண்டவரின் முதலாளி என நம்பப்படுகிறது) அந்த ஆடவரின் வீட்டிற்குச் சென்றார். அந்த முதியவரைக் காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த முதியவர் உயிரிழந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. மாண்ட முதியவர் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) நண்பகல் 12 மணி அளவில் புளோக் 3 தெலுங் பிளாங்கா கிரசெண்ட்டின் பத்தாவது மாடி வீட்டில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் பலர் கூடியதாக அதே குடியிருப்புக் கட்டடத்தில் வசிக்கும் 72 வயது திரு சுவா, ஷின்மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
மாண்ட முதியவரின் வீட்டுக்கு வெளியே உள்ள பொது தாழ்வாரத்தில் துர்நாற்றம் வீசியதாக அவர் கூறினார்.
தமது அண்டைவீட்டுக்காரர் இறந்துவிட்டார் என்பது அப்போதுதான் தமக்குத் தெரியவந்தது எனத் திரு சுவா கூறினார்.
சம்பவ இடத்தை ஷின்மின் செய்தியாளர்கள் மாலை 5 மணி அளவில் அடைந்தனர். அப்போது அந்த அடுக்குமாடிக் கட்டடத்துக்குக் கீழே பல காவல்துறை வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மாண்ட முதியவர் வசித்த வாடகை வீட்டிற்குள் காவல்துறை அதிகாரிகள் வருவதும் போவதுமாய் இருந்ததாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர். மாலை 6 மணி அளவில் மாண்டவரின் சடலத்தை அதிகாரிகள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி கீழே காத்திருந்த வாகனத்தில் வைத்தனர்.
மாண்ட முதியவர் அவ்வீட்டில் தனியாக வசித்து வந்ததாக திரு சுவா தெரிவித்தார். அண்டைவீட்டாருடன் அவர் அவ்வளவாகப் பேசியதில்லை என்றும் தனியாக அமர்ந்து மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாண்ட முதியவர் அந்த வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்ததாக அதே கட்டடத்தில் வசிக்கும் 68 வயது திரு ஹோங் கூறினார்.
மாண்ட முதியவர் தமது சகோதரியுடன் அந்த வாடகை வீட்டில் வசித்து வந்ததாக அண்டைவீட்டார் தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த முதியவரின் சகோதரி மரணம் அடைந்ததாக அவர்கள் கூறினர்.
அந்த வீட்டில் முதலில் மாண்டவரின் சகோதரியும் அவர்களது தந்தையும் ஒன்றாக வசித்து வந்ததாக அந்தக் கட்டடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் திரு ஹோங் தெரிவித்தார்.
தந்தை இறந்த பிறகு, சகோதரியுடன் அந்த முதியவர் வசித்ததாக திரு ஹோங் கூறினார்.
மாண்ட முதியவரின் வீட்டிற்கு வெளியிலிருந்து ஜூலை 20லிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதாக அந்த வீட்டிற்கு மேல் மாடியில் உள்ள வீட்டில் வசிக்கும் 70 வயது மூதாட்டி தெரிவித்தார். ஆனால் வாடை எங்கிருந்து வருகிறது எனத் தமக்கு அப்போது தெரியவில்லை என்றார் அவர்.
துர்நாற்றம் மோசமடைந்ததாகவும் தமது வீட்டுச் சன்னல்களை மூடிவைத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகவும் மூதாட்டி தெரிவித்தார்
முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு ஒருசில நாள்களுக்கு முன்பே அவர் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.