ஈசூன் வட்டாரத்தில் பறவைகளுக்கு உணவளித்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு

ஈசூன் வட்டாரத்தில் பறவைகளுக்கு உணவளித்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு

1 mins read
413cd783-6aa3-4143-81f1-2108f0804d8b
குற்றம் சுமத்தப்பட்ட டான் சோங் ஹாங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூன்று வெவ்வேறு சம்பவங்களில் புறாக்களுக்கும் காகங்களுக்கும் உணவளித்ததாக 74 வயது மாது மீது புதன்கிழமை (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

டான் சோங் ஹாங் எனப்படும் அவர்மீது வனவிலங்குச் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தேசிய பூங்காக் கழக வனவிலங்குப் பராமரிப்புப் பிரிவின் தலைமை இயக்குநரிடமிருந்து எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெறாமல் பறவைகளுக்கு அவர் உணவளித்ததார் என்பது குற்றச்சாட்டு.

2025 நவம்பர் 28ஆம் தேதி ஈசூன் ஸ்திரீட் 11ல் புறாக்களுக்கு அந்தப் பெண் உணவளித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. தொடர்ந்து, 2025 டிசம்பர் 24ஆம் தேதி ஈசூன் தொடக்கப் பள்ளி அருகே எம்ஆர்டி தண்டவாளப் பகுதியின் கீழ் புறாக்களுக்கும் காகங்களுக்கும் அவர் உணவளித்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது சம்பவமாக, இவ்வாண்டு மார்ச் 20ஆம் தேதி அதிகாலை 4.25 மணியளவில் ஈசூன் பூங்கா இணைப்பு வட்டாரத்தில் புறாக்களுக்கு அவர் ரொட்டியை உணவாக அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டபோது உரைபெயர்ப்பாளர் மூலம் நீதிமன்றத்தில் பேசிய அந்தப் பெண், “இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்கமாட்டேன். என்ன நடந்தது என்பதை நான் விளக்க வேண்டும். எனவே மின்னஞ்சல் முகவரி தாருங்கள்,” என்று கேட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் மின்னஞ்சல் முகவரி தருமாறு தேசிய பூங்காக் கழகத்தின் வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் ஜூலை 8ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எழுத்துபூர்வ அனுமதி இன்றி வனஉயிரினங்களுக்கு, வேண்டுமென்றே உணவூட்டும் குற்றத்துக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்