தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் தொகுதி எல்லைக் குழு அமைக்கப்பட்டது

3 mins read
53d714e7-4939-4ad6-88cc-9df76d285188
சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் குழுவைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அமைத்துள்ளதாக தேர்தல் துறை புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பிரதமர் அடுத்த பொதுத் தேர்தல் குறித்து அறிவிப்பதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது.

கடந்த நான்கு தேர்தல்களில், குழு அமைப்பதற்கும் வாக்களிப்பு நாளுக்கும் இடையிலான காலம் நான்கு முதல் 11 மாதங்கள் வரை இருந்தது.

இந்நிலையில், குழு தனது பணிகளை உரிய நேரத்தில் முடிக்க முடிந்தால் மே மாதத்தில் அல்லது அதற்கு முன்னரே தேர்தல் நடைபெறலாம்.

பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் தேவையான நடவடிக்கையாக, குழு தயாரிக்கும் அறிக்கை தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்யும். அடுத்த பொதுத் தேர்தல் நவம்பர் 2025க்குள் நடத்தப்பட வேண்டும். குழு பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

எல்லைகளை மறுஆய்வு செய்வதில், கடந்த பொதுத் தேர்தல் குழுத்தொகுதிகளின் சராசரி அளவு, தனித்தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாக்காளர்களின் சராசரி விகிதம் ஆகியவற்றை கருத்தில்கொள்ளுமாறு குழு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் துறை தெரிவித்தது.

குழு அமைக்கப்பட்டது குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவித்த பிரதமர் வோங், அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் உரிய நேரத்தில் அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

குழு அறிக்கையை வெளியிடுவதற்கு காலக்கெடு எதுவும் கொடுக்கப்படவில்லை. எனினும் கடந்த கால குழுக்கள் மூன்று வாரங்கள் முதல் ஏழு மாதங்கள் வரை எடுத்துள்ளன.

பிரதமரின் தலைமைச் செயலாளரான டான் கீ யோங் தலைமை வகிக்கும் இக்குழுவில், சிங்கப்பூர் நில ஆணையத்தின் தலைமை நிர்வாகி கொலின் லோ, வீடமைப்பு வளர்ச்சிக்கழகத் தலைமை நிர்வாகி டான் மெங் டுய், தலைமை புள்ளிவிவர அதிகாரி கோ எங் சுவான், தேர்தல் துறைத் தலைவர் லிம் ஷி யாங் ஆகிய ஐந்து மூத்த அரசு ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தற்போதுள்ள தொகுதிகளின் எல்லைகளை மறுஆய்வு செய்வதும் எத்தனை குழுத்தொகுதிகள், தனித்தொகுதிகள் இருக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பதும் குழுவின் பணி.

எல்லை மாற்றத்தில், பொதுவாக மக்கள் தொகை மாற்றம், குடியிருப்பு மேம்பாடுகள் காரணமாக தற்போதைய தேர்தல் தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை மாற்றங்கள் கருத்தில்கொள்ளப்படும்.

அறிக்கை நாடாளுமன்றத்திடம் அளிக்கப்படும். புதிய எல்லைகளை ஏற்றுக்கொள்வது குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.

மேற்கில் அமைக்கப்பட்டுள்ள தெங்கா, பொத்தோங் பாசிர் வட்டாரத்தின் பிடாடாரி போன்ற புதிய நகரங்களால், அந்தப் பகுதிகளில் மக்கள்தொகை உயர்ந்திருப்பதை அடுத்து, அந்தத் தொகுதிகள் அல்லது அருகில் இருக்கும் தொகுதிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்ற ஊகம் எழுந்துள்ளது.

தேர்தல் தொகுதி எல்லைக்குழு கடைசியாக 2020 பொதுத் தேர்தல் முன்னதாக 2019 ஆகஸ்ட் மாதத்தில் கூட்டப்பட்டது. குழுத்தொகுதிகளில் சராசரி அளவைக் குறைக்கவும், அதிக தனித்தொகுதிகளை உருவாக்கவும் அப்போது குழு பணிக்கப்பட்டது.

ஜூன் மாதம் நடந்த பொதுத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக 2020 மார்ச் மாதம் குழு அறிக்கையை நிறைவு செய்தது. 1991க்குப் பிறகு முதல் முறையாக ஆறு உறுப்பினர் குழுத்தொகுதிகள் அப்போது இடம்பெறவில்லை. அங் மோ கியோ, பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதிகளில் தலா ஐந்து உறுப்பினர்களாக எண்ணிக்கை குறைந்தது.

பிரதமர் வோங் மே மாதம் அரசாங்கத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்த பொதுத் தேர்தல் தேதி பற்றிய ஊகச் செய்திகள் வலம் வருகின்றன.

டிசம்பரில் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், ஆளுங்கட்சியை தேர்தலில் தாம் வழிநடத்துவதாகத் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டன. புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதுடன் தொகுதிச் உலாக்களும் இடம்பெற்று வருகின்றன.

கிட்டத்தட்ட 5,000 அரசு ஊழியர்களும் தேர்தல் அதிகாரி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2024 ஏப்ரலில் பயிற்சி தொடங்க இருப்பதாக தேர்தல் துறை 2024 மார்ச்சில் கூறியது.

தற்போது 93 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன. இதில், 14 தனித் தொகுதிகள், 17 குழுத்தொகுதிகள். ஒரு குழுத்தொகுதிக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை சராசரியாக 4.65. ஆறு நான்கு உறுப்பினர் தொகுதிகளும் 11 ஐந்து உறுப்பினர் தொகுதிகளும் உள்ளன.

தேர்தல் தொகுதி எல்லைக் குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தல் எப்போது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்