எந்த அரசியல் கட்சியை மக்கள் அதிகம் நம்பலாம் என்ற எளிய கேள்வியே ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் முக்கியத்துவம் பெறவேண்டிய அம்சம் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.
பீஷான் விளையாட்டரங்கில் புதன்கிழமை (ஏப்ரல் 30) மக்கள் செயல் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் இங், “ஒவ்வொரு தேர்தலும் சிக்கலாகக்கூடும். ஏனெனில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு மிகவும் மாறுபட்ட விஷயங்களைக் கூற முனைகின்றன,” என்று கூறினார்.
“நான் யாரை அதிகமாக நம்புவது? பணத்தை எந்த வங்கியில் போடுவது? எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குச் சந்தா செலுத்துவது? எந்த இணையத் தளத்திலிருந்து பொருள் வாங்குவது? என்பதை முடிவு செய்யவதைப் போலத்தான் இதுவும். சிறியதோ பெரியதோ, இந்த வாழ்க்கை முடிவுகள் அனைத்தும் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டவை.
“நம்பிக்கையை எப்படி வளர்க்கிறோம் என்பதுதான் இங்கே கேள்வி. வாக்குறுதிகளில் நம்பிக்கை உருவாவதில்லை. அது சம்பாதிக்கப்பட வேண்டும். நல்ல, மோசமான காலங்களில் சோதித்துப் பார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“அதே வழியில்தால் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கிறோம். நம்பிக்கையானவர்களுடன் நெருக்கமாக இருக்கிறோம்.
“மக்கள் சரியாகத் தேர்வு செய்தால் அவர்கள் வாக்களிக்கும் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக நின்று, சிரமங்களில் உதவிசெய்து, அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவார்கள். ஆனால் நம்பிக்கை தவறாக இருந்தால், அது விரக்திக்கும் மனவேதனைக்கும் வழிவகுக்கும்,” என்றார் டாக்டர் இங்.
அரசியலில் அறிமுகமே இல்லாத அறுவைச் சிகிச்சை நிபுணரான தம்மை பீஷான்-தோ பாயோ மக்கள் நம்பினர் என்றும் முன்னாள் துணைப் பிரதமர் வோங் கான் செங், மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் போன்ற மூத்த சகாக்களுடன் தாம் பயணம் செய்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“அவர்களுடைய உழைப்பாலும் முயற்சியாலும் மக்கள் என்னை நம்பினார்கள். என்னை நம்பியதாலும் ஆதரித்ததாலும் என் மதிப்பை நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். பீஷான்-தோ பாயோவும் மேரிமவுண்ட்டும் மேம்பட்டுள்ளன. கூடவே சிங்கப்பூரும் மேம்பட்டுள்ளது,” என்றார் திரு ஹெங்.
2001ல் அரசியலில் சேர்ந்த டாக்டர் இங், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.