அதிபர் தேர்தல் காலகட்டத்தின்போது, தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை அல்லது அத்தகைய முடிவுகள் இடம்பெற்றுள்ள எதனையும் வெளியிட அனுமதியில்லை எனத் தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இம்மாதம் 11ஆம் தேதி தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் அதிபர் தேர்தல் நாளான செப்டம்பர் 1ஆம் தேதிவரை இந்த உத்தரவு செல்லும் என்று தேர்தல் துறை புதன்கிழமை தெரிவித்தது.
அதிபர் தேர்தல் தொடர்பான இணையவழிக் கருத்துக்கணிப்புகள் இடம்பெற்றதைக் கண்ட நிலையில், தேர்தல் துறை இவ்விதிமுறையைப் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சில குழுக்கள் அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்துவதையும் அவ்வப்போதைய முடிவுகள் நிலவரத்தை வெளியிட்டு வருவதையும் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.
அதிபர் தேர்தல் சட்டப்படி, தேர்தல் காலகட்டத்தில் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவது குற்றமாகும். அக்குற்றத்திற்கு $1,500 வரை அபராதம், ஓராண்டுவரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
அதேபோல், தேர்தல் நாளன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் மூடப்படுமுன் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதும் குற்றமாகும். அதற்கும் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் பொருந்தும்.
முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, தொழில்முனைவர் ஜார்ஜ் கோ, 63, முன்னாள் ஜிஐசி தலைமை முதலீட்டு அதிகாரி இங் கோக் சோங், 75, முன்னாள் என்டியுசி இன்கம் தலைமை நிர்வாகி டான் கின் லியன், 75, ஆகிய நால்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் உள்ளனர்.

