கரு முட்டைகளை உறைய வைக்கும் சிகிச்சை முறைக்கு தேவை கூடி வருகிறது. ஆகையால், இத்தகைய சேவையை வழங்கும் மருந்தகங்கள் சுறுசுறுப்பாக ஆயத்தமாகி வருகின்றன.
சிங்கப்பூரில் கரு முட்டைகளை உறைய வைப்பதற்கான வயது வரம்பு ஜூலை 1 முதல் உயர்த்தப்படுகிறது.
அதன்படி ஒற்றையராக வாழும் மாதர்கள் உள்ளிட்ட 21 முதல் 37 வரை வயதுள்ள பெண்கள் மருத்துவமற்ற காரணங்களுக்காக கரு முட்டையை உறைய வைக்க அனுமதிக்கப்படுவார்கள்.
முதலில் இந்த வரம்பு 35 வயது வரை என்று இருந்தது. அது 37 வயது வரை உயரும் என்று கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
கரு முட்டையை உறைய வைக்க சில தனியார் மருந்தகங்களிலும் கேகே மாதர், சிறார் மருத்துவமனை, தேசிய பல்கலை மருத்துவமனை ஆகியவற்றிலும் ஒரு சுழற்சிக்கு $8,000 முதல் $15,000 வரை செலவாகும். கரு முட்டையை உறைந்த நிலையில் தொடர்ந்து வைத்திருக்க கூடுதலாக ஆண்டுதோறும் கட்டணம் செலுத்த வேண்டும்.
மாதர் மேம்பாடு பற்றிய வெள்ளை அறிக்கை சென்ற ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது முதல் கரு முட்டையை உறைய வைப்பது பற்றி 100க்கும் மேற்பட்டவர்கள் தொடர்புகொண்டு இருப்பதாக தாம்சன் கருவள நிலையம் தெரிவித்தது.
வெள்ளை அறிக்கை அறிவிப்பு வெளியான பிறகு 30 முதல் 40 வரை வயதுள்ள சுமார் 20 மாதர்கள் கேகே மருத்துவமனையுடன் தொடர்புகொண்டு தாங்கள் கரு முட்டையை உறைய வைப்பதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக இந்த மருத்துவமனையின் இனப்பெருக்க மருந்தகத் துறையின் மூத்த ஆலோசகர் இணைப் பேராசிரியர் சாதனா நடராஜா தெரிவித்தார்.
கரு முட்டையை உறைய வைப்பது பற்றி பரிசீலிக்கும் பெண்கள், தாங்கள் ஒன்று முதல் இரண்டு சுழற்சி மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டி இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
பொதுவாக குறைந்தபட்சம் 20 கரு முட்டைகள் எடுக்கப்பட்டு அவை உறைய வைக்கப்படும் என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று 'வெர்சுஸ் ஃபெர்டிலிட்டி சென்டர்' என்ற மருந்தகத்தின் அறிவியல் துறை இயக்குநர் லியு சுவீ லியான் கூறினார்.

